ஆசைகாட்டி மோசம் செய்த நிதி நிறுவன மோசடி கும்பல்

ஆசைகாட்டி மோசம் செய்த நிதி நிறுவன மோசடி கும்பல்

ரு லட்சம் ரூபாய் கட்டினால் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வட்டி. ஓராண்டு முடிவில் இரண்டு லட்சம் ரூபாயாக திருப்பித் தரப்படும் எனக்கூறி, மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த பெண் ஒருவரை போலீசார் சென்னையில் கைது செய்தனர். 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையைச் சேர்ந்த பச்சமுத்து என்பவரின் 30 வயது மகள் பவித்ரா. இவர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த 'ஸ்காட்ஸ் எண்டர்பிரைசஸ்' என்ற தனியார் நிதி நிறுவன கிளையில் பணம் கட்டி ஏமாந்துவிட்டதாக, பெரம்பலூர் மாவட்டம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தார். 

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சென்னை கொரட்டூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார், அவரது மனைவி சிவசங்கரி ஆகிய இருவரும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை ஏஜென்டாகப் பயன்படுத்தி ஊழல் செய்திருப்பது தெரியவந்தது. இதில் இவர்கள் பொதுமக்களிடம் ஒரு லட்சம் ரூபாய் கட்டினால் ஒரே வருடத்தில் அதை இரட்டிப்பாக தருவதாகவும், கொடுத்த ஒரு லட்சம் பணத்திற்கு மாதம் 5000 வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 

இவர்களிடம் வேப்பந்தட்டையைச் சேர்ந்த பவித்ரா உட்பட பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் 2 கோடி 30 லட்சம் வரை பணத்தைக் கட்டி ஏமாந்துள்ளனர். அதன் பின்னர் பணத்தை கட்டியவர்களுக்கு, கூறியபடி பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்து தலைமறைவானது தெரியவந்தது. அவர்களைப் பிடிக்க எஸ்.பி சியாமளாதேவியின் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 

இந்நிலையில் அவர்கள் சென்னையில் தலைமறைவாக இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், சென்னைக்கு வந்து தேடியதில் சிவசங்கரி மட்டும் இவர்களிடம் சிக்கிக்கொண்டார். இவரை கைது செய்த போலீசார், பெரம்பலூர் அழைத்து வந்து விசாரணை நடத்திய பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர். 

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிவசங்கரியின் கணவர் மற்றும் உள்ளூர் ஏஜென்டாக செயல்பட்ட சரத்குமார் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இதுபோன்ற பல்வேறு போலியான நிதி நிறுவனங்கள், பொதுமக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்தும், முறையான ஆவணம் இல்லாததால் போலீசில் புகார் அளிக்க முடியாமல் பாதிக்கப்பட்டவர்கள் பரிதவித்து வருகின்றனர். 

விரைவாக பணம் ஈட்ட வேண்டும் என்ற மனப்பாங்கில், குறுக்கு வழியில் செல்பவர்களுக்கு இறுதியில் கிடைப்பதென்னவோ ஏமாற்றம்தான். மனிதர்கள் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com