
மும்பை கல்யாண் – டோம்பிவிலி பகுதியில் குப்பைகளை தெருவில் வீசுபவர்கள், சுகாதார சீர்கேட்டில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக, மாநகராட்சி சார்பில் மார்ஷல்கள் (ஒழுங்குமுறைப் பணியாளர்கள்) நியமிக்கப்பட்டனர்.
பல்வேறு மக்கள் அவர்கள் மீது புகாரளித்த காரணமாக பணியிலிருந்து நீக்கப்பட்டனர். இரு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துப்புரவு மார்ஷல்களை நியமிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கை மீண்டும் பயன்படுத்தினால் `5,000/- அபராதமும், பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு `300 வரை அபராதமும் விதிக்கப்படவிருக்கிறது. மேலும், பொது இடங்களில் அதிக அளவிலான குப்பைகள் கொட்டுபவர்களிடமிருந்து `3,000 முதல் `9000 வரை அபராதம் வசூலிக்கப்படுமென மும்பை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
டாக்டர்களின் அறிவுறுத்தல்!
எதற்காக? மாஸ்க் அணியத்தான்!
மும்பையில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளிலும் நுரையீரல் பாதிப்பு, சுவாசப் பிரச்னை காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இது குறித்து டாக்டர் ஒருவர் கூறுவதாவது,
“தற்சமயம் பல்வேறு காரணங்களால் நகரில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால், ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரகின்றனர். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மேம்படுத்தப்பட்ட இன்ஹேலர்கள் கிடைப்பதால், குறிப்பிட்ட சிலரை மருத்துவமனையில் அனுமதிக்கத் தேவையில்லை.
நுரையீரல் பாதிப்புள்ளவர்கள், பொதுவாக காற்று மாசு அதிகமாக இருக்கும் காலைநேரங்களில் வெளியே செல்வதை தவிர்ப்பது அவசியம். காலை நடைப் பயிற்சியை வெளியே சென்று செய்யாமல், வீட்டினுள்ளேயே செய்வது, யோகாவில் ஈடுபடுவது ஆகியவைகள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
மேலும் நோயாளிகள் மட்டுமன்றி அனைவரும் மாஸ்க் அணிந்து வெளியே வருவதை உறுதி செய்ய வேண்டும்.”
கோலாப்புரி காலணிகள் - விற்பனை சரிவு!
மராட்டிய மாநிலத்தில் தோல் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கோலாப்புரி காலணிகள் மிகவும் பிரபலமானவை. புனேவிலுள்ள கோலாப்பூர் பகுதியில் வசிக்கும் மக்களால் அவை தயாரிக்கப்படுகின்றன. டிசைன்கள் மற்றும் வடிவமைப்பைப் பொறுத்து ஒரு ஜோடி காலணியைத் தயாரிக்க 10 – 15 நாட்கள் ஆகின்றன.
அமிதாப் பச்சன், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், கிரிக்கெட் ஸ்டார் விராட் கோலி போன்ற பல பிரபலங்கள் இந்த காலணிகளை அணிந்துள்ளனர். தற்சமயம் இக்காலணி தயாரிக்கும் தொழில் சரிந்து வருவதோடு விற்பனையும் குறைந்து வருவதாக வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து காலணி தயாரிப்பாளர் கூறுவதாவது:
“இளைய தலைமுறையினர் மணிக்கணக்கில் உட்கார்ந்து காலணி தயாரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஐ.டி. கம்பெனிகள் மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் பணி பரிய சென்றுவிட்டனர். இத்தொழிலில் இப்போது சுமார் 50 – 60 குடும்பங்களே உள்ளனர். வெளிநாடுகளில் இந்த காலணிக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால், ஆன்லைன் விற்பனைத் தளங்களில் ரிட்டர்ன் பாலிசி இருப்பதால், பலர் காலணிகளை பெற்று 2 நாட்கள் பயன்படுத்திவிட்டு ரிட்டர்ன் செய்கின்றனர். இதன் காரணமாகவும் தங்களது வணிகம் பாதிக்கப்படுவது வேதனைக்குரியதாக இருக்கிறது. இளைய சமுதாயம் முன் வரவேண்டும்.”