கடைகளில் 2 குப்பை பெட்டிகள் வைக்காவிட்டால் ரூ.2 லட்சம் வரை அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

கடைகளில் 2 குப்பை பெட்டிகள் வைக்காவிட்டால் ரூ.2 லட்சம் வரை அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை நகரில்  உள்ள அனைத்துக் கடைகளிலும் இரண்டு குப்பைத் பெட்டிகளை வாடிக்கையாளர்களின் பார்வையில் தெரியும்படி வைத்திருக்க வேண்டும். அதில் மக்கும் குப்பை - மக்காத குப்பை என எழுதி இருக்க வேண்டும். மீறினால் கடைகளின் உரிமையாளர்களுக்கு   ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. நகரில் குவியும் குப்பைகளை தரம் பிரிப்பதில் ஏற்பட்டுள்ள சிரமத்தை போக்கவே மாநகராட்சி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 94 ஆயிரத்து 523 கடைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கடைகள் அனைத்திலும், இரண்டு குப்பை பெட்டிகள் வாடிக்கையாளர்கள் பார்வையில் தெரியும்படி வைத்திருக்க வேண்டும்.

முதற்கட்டமாக 18 சாலைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. திருவொற்றியூர் நெடுஞ்சாலை, அம்பத்தூர்-செங்குன்றம் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, எலியட்ஸ் கடற்கரை சாலை, ராஜீவ்காந்தி சாலை, தியாகராய சாலை உள்ளிட்ட சாலைகள் இதில் அடங்கும். இந்த சாலைகளில் 196 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. பொது இடங்களில் குப்பைகளை கொட்டி நகரின் அழகை கெடுப்பதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கையை மாநகராட்சி எடுத்துள்ளது. பஸ் நிறுத்தங்களில் வைப்பதற்காக 442 சிறிய குப்பை சேகரிப்பு பெட்டிகளை மாநகராட்சி வாங்கி உள்ளது. இந்த பகுதிகளை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க கூடுதலான ஊழியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொது இடங்களை சுத்தமாக பராமரிக்கும் இந்த திட்டத்தை பொதுமக்கள் மிகவும் வரவேற்றுள்ளார்கள்.

எச்சரிக்கை

இரண்டு குப்பைத் தொட்டிகளை விரைந்து வைக்கவும் கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, கடைகளின் உரிமையாளர்கள் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் அல்லது குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களில் சேர்க்க வேண்டும். நடைபாதை மற்றும் சாலைகளில் குப்பைகளை கொட்டும் கடைகளின் உரிமையாளர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com