டெல்லியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட இன்டிகோ விமானத்தில் தீ பற்றியதால் பயணிகள் பீதியடைந்தனர்.இண்டிகோ விமானங்கள் தற்போது அடிக்கடி தொழில் நுட்ப கோளாறில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது.
நேற்று இரவு டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் 6E2131 இன்டிகோ விமானம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
அப்போது விமானம் ஓடுபாதைக்கு 9.40 மணி அளவிற்கு வந்துள்ளது. 9.45 மணி அளவில் டேக் ஆப் ஆவதற்கு வேகமாக சென்ற போது வலப்பக்க இருக்கைக்கு அருகே எந்திரத்தில் திடீரென தீப்பற்றியது. உடனே விமான ஓட்டுநர் அதை அறிந்து விமானத்தை நிறுத்தி கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார்.
உடனே தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் 6E2131 விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டு, மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர்.
இது குறித்து இண்டிகோ ஒரு அறிக்கையில், “டெல்லியில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்ட விமானம் 6E2131 டேக் ஆஃப் ரோலில் இருந்தபோது தொழில்நுட்ப சிக்கலைச் சந்தித்தது. அதன் பிறகு விமானி உடனடியாக புறப்படுவதை நிறுத்திவிட்டு விமானம் விரிகுடாவுக்கு திரும்பியது என்று தெரிவித்துள்ளது .
பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர், மேலும் விமானத்தை இயக்க மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்” என இன்டிகோ நிறுவனம் கூறி உள்ளது.
அந்த விமானத்தில் 177 பயணிகள், 7 ஊழியர்கள் என மொத்தம் 184 பேர் இருந்துள்ளனர். இது தொடர்பாக உரிய விளக்க அறிக்கையை விரைவில் அளிக்கவேண்டும் என இன்டிகோ நிறுவனத்திற்கு, விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது .