காஞ்சிபுரத்துக்கு அருகே குருவிமலை வலத்தோட்டம் வசந்தம் நகரில் பட்டாசு தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலையை நரேந்திரன் என்பவர் நடத்தி வந்தார். சுமார் இருபது ஆண்டுகளாக உள்ள இந்த பட்டாசு ஆலையில் இருந்து திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளுக்கு வாண வேடிக்கைகளை மக்கள் வாங்கிச் செல்வர். இந்த ஆலையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
இன்று காலை பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது பகல் 11 மணி அளவில் திடீரென பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து அந்தத் தொழிற்சாலையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறின. அதையடுத்து அந்த ஆலையின் மொத்த அறைகளும் வெடித்ததில் பணியில் இருந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். அங்கு பலத்த அலறல் சத்தம் கேட்டதால் அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து பார்த்தனர்.
அந்த பட்டாசு ஆலை இருந்த இடத்தைச் சுற்றி வேலையில் ஈடுபட்டிருந்தவர்களின் உடல்கள் துண்டு துண்டாகச் சிதறிக் கிடந்தன. இதைக் கண்ட பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து போலீஸ் நிலையத்துக்கும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களும் வந்தன.
தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் தண்ணீரைப் பீச்சியடித்து தீயைக் கட்டுப்படுத்தினர். அந்தப் பட்டாசு வெடி விபத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் உட்பட எட்டு பேர் உடல் சிதறி இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. படுகாயமுற்ற சுமார் 20 பேருக்கும் மேற்பட்டோரை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, டிஐஜி பகலவன், மாவட்ட எஸ்பி சுதாகர், மேயர் மகாலட்சுமி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர வெடி விபத்தால் அந்தப் பகுதியே மிகுந்த பதற்றத்துடன் காணப்படுகிறது.