நியூசிலாந் நாட்டின் ஆக்லாந்து மையப்பகுதியில் FIFA மகளிர் உலகக் கோப்பை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அப்பகுதியில் கட்டப்பட்டு வந்த கட்டுமான பகுதியில் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் மற்றும் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆக்லாந்து மையப் பகுதியில் உள்ள வணிக வளாக பகுதியில் கட்டப்பட்டுவந்த கட்டுமான தளத்தில் இருந்து திடீரென துப்பாக்கி சூடு சத்தம் கேட்டது. இந்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த நபர் மற்றும் மேலும் ஒருவர் உயிரிழந்தனர். ஃபிபா மகளிர் உலக கோப்பை 2023 தொடக்க நிகழ்ச்சியின் போது நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், “இந்தத் தாக்குதலை பயங்கரவாதச் செயலாகப் பார்க்க முடியாது என்றும் திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும். மேலும் குயின் தெருவில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, அச்சுறுத்தலைப் ஏற்படுத்தும் வகையில் எந்த ஆபத்தும் ஏற்படாது என பொதுமக்கள் உறுதியாக நம்பலாம். மேலும், இந்த துப்பாக்கி சூடு தாக்குதலுக்கான அரசியல் காரணம் அல்லது துப்பாக்கி வைத்திருந்த நபர் யார், அவர் எதற்காக துப்பாக்கியை பயன்படுத்தினார் என்பதற்கான உண்மையான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் இந்த சம்பவத்தின்போது பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, போராடிய நியூசிலாந்து காவல்துறையின் துணிச்சலுக்கு நன்றி தெரிவிப்பதாக” அவர் கூறினார்.
அதேபோல், இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்கள் நிகழும்போது மற்றவர்களைக் காப்பாற்ற தங்கள் உயிரைப் பணயம் வைப்பவர்களின் செயல்கள் வீரத்திற்குக் குறைவானவை அல்ல என பொதுமக்களை பாராட்டினார். பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் .
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ஆக்லாந்து மேயர் வெய்ன் பிரவுன், “அனைத்து FIFA பணியாளர்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” என்றார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது "ஆழ்ந்த இரங்கலை" ஃபிபா நிர்வாக குழு தெரிவித்ததுடன், வீரர்களின் பாதுகாப்பு விஷயத்தில் நியூசிலாந்து அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் இந்த சம்பவத்திற்கு அருகாமையில் உள்ள அணிகளுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்புகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருவதாக” ஃபிபா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு ஃபிபா மகளிர் உலகப்கோப்பை நடைபெறும் பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என விளையாட்டுத்துறை அமைச்சர் கிரான்ட் ராபர்ட்சன் கூறியுள்ளார். ஒன்பதாவது FIFA மகளிர் உலகக் கோப்பை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.