இன்று அதிகாலை ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்தது ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில். விடியற்காலை சுமார் 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் ரயில் நிலையம் அருகே அந்த ரயில் வந்துகொண்டிருந்தபோது, அந்த ரயிலில் பயணம் செய்த ஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் ஒருவர், திடீரென தன்னுடன் பயணம் செய்த மற்றொரு ஆர்பிஎஃப் காவலர் உள்ளிட்ட நான்கு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்ட ஆர்பிஎஃப் கான்ஸ்டபிளின் பெயர் சேத்தன் சிங் என்றும், துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் ஆர்பிஎஃப்-பில் ஏஎஸ்ஐ பொறுப்பு வகிப்பவர் என்றும், மற்ற மூவரும் பொதுப் பயணிகள் என்றும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இது குறித்து தெரிவித்த ரயில்வே போலீசார், “ஓடிக்கொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் (12956), மும்பையிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள பால்கர் ரயில்வே ஸ்டேஷனைக் கடந்ததும் துப்பாக்கிச் சூடு நடைபெற்று இருக்கிறது. அதே ரயிலில் பயணம் செய்த நான்கு பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சேத்தன் சிங் என்ற ஆர்பிஎஃப் வீரர், தஹிசார் நிலையத்தில் ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓட முயற்சி செய்தார். அவரை போலீசார் ஆயுதங்களுடன் மடக்கிப் பிடித்து கைது செய்து இருக்கின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து மேற்கொண்டு, கொலையாளி சேத்தன் சிங்கிடம் செய்யப்படும் விசாரணையில் தெரியவரும். இது பற்றி வடக்கு டிசிபி ஜிஆர்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறி இருக்கின்றனர்.