பாகிஸ்தான் தேர்தலில் முதல் முறையாக இந்து பெண் போட்டி!

Dr Saveera Parkash
Dr Saveera Parkash

பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் முதல் முறையாக இந்து பெண் ஒருவர், கைபர் பக்டூன்கவாஸ் புனர் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்த தகவலை டான் பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் 16-வது தேசிய அசெம்பிளிக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் 2024 பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

புனர் மாவட்டத்தில் பிகே-25 தொகுதியில் போட்டியிட சவீரா பர்காஷ் என்ற இந்து பெண் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இந்து சமூகத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ், தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரது தந்தை ஓம் பர்காஷ் ஓய்வுபெற்ற மருத்துவர். கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

குவாமி வாடன் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதியான சலீம்கான், இந்த பொதுத் தேர்தலில் புர்னர் பகுதியிலிருந்து தேர்தலில் போட்டியிடும் முதல் இந்து பெண் சவீரா பர்காஷ் என்று குறிப்பிட்டார்.

அபோதாபாதில் உள்ள கல்லூரியில் படித்து மருத்துவத்தில் பட்டம் பெற்ற சவீரா பர்காஷ், புர்னரில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மகளிர் அணி பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். சமூகத்தில் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும், மகளிர் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தேர்தலில் போட்டியிடுவதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் பெண்கள் புறக்கணிக்கப்படு வந்துள்ளதுடன், ஒடுக்கப்பட்டும் வந்துள்ளனர். இதை மீட்டெடுப்பதே எனது முக்கிய பணியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தந்தையின் வழியை பின்பற்றி அரசியலில் குதித்துள்ள சவீர பர்காஷ், ஏழைகளின் நலனுக்காக பணி செய்வதே தமது இலட்சியம் என்று கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்த அவர், கட்சி மேலிடம் தமது மனுவை ஏற்கும் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் செல்வாக்குபெற்ற இம்ரான் நெளஷத் கான் என்பவர் சவீரா பர்காஷ் தேர்தலில் போட்டியிடுவதை வரவேற்றுள்ளார். ஆணாதிக்கத்தை உடைக்கும் வகையில் ஒரு பெண் போட்டியிடுவதை தாம் முழுமனதுடன் வரவேற்பதாக அவர் கூறினார். பாகிஸ்தானுடன் புனர் இணைந்து 55 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய திருத்தச் சட்டத்தின்படி பொது இடங்களில் 5 சதவீதம் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com