நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் முதல்முறை எம்.பி.க்கள், இளம் எம்.பி.க்கள் ஆகியோர் விவாதங்களில் பங்கேற்க அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று அனைத்து கட்சியினரிடமும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் “ஜி-20 தலைமை பொறுப்பு இம்முறை இந்தியாவிடம் கிடைத்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த தலைமை பொறுப்பு கிடைத்துள்ளது மிகவும் முக்கியமானது.
உலக அளவில் இந்தியா தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. இந்தியா மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. உலகளாவிய தளத்தில் இந்தியா தனது பங்களிப்பை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா ஜி-20 தலைவர் பதவியை பெற்று இருப்பது மிகவும் சிறப்பான ஒன்று. ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. உலக அளவில் இந்தியா தன்னுடைய திறனை வெளிக்காட்ட கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு.
மேலும், நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், தற்போதைய உலகளாவிய சூழ்நிலைகளுக்கு மத்தியில், நமது நாட்டை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கும், முன்னோக்கி கொண்டு செல்வதற்கான புதிய வாய்ப்புகளை மனதில் கொண்டும் முக்கியமான முடிவுகளை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
முதல்முறை எம்.பி.க்கள், இளம் எம்.பி.க்கள் ஆகியோரின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும், ஜனநாயகத்தின் வருங்கால சந்ததியை தயார்படுத்தவும், விவாதங்களில் பங்கேற்கவும் அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
அவையில் ஏற்படும் கூச்சல் குழப்பத்தினால் அவை ஒத்தி வைக்கப்படுகிறது. இதன் காரணமாக முறையாக விவாதங்கள் நடத்த முடியவில்லை என சமீப நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்கும் போதும், இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் போதும் தெரிவித்து வருகிறேன். இதனை மனதில் வைத்து அனைத்து உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தில் செயல்பட வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
2