உலகிலேயே மிக உயரமான போர் பகுதியான சியாச்சின் மலைப்பகுதியில், முதல் பெண் மருத்துவ அதிகாரியாக கேப்டன் பாத்திமா வாசிம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இமயமலையில் அமைந்துள்ள சியாச்சின் என்ற பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 15600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தை சீனாவும், பாகிஸ்தானும் ஆக்கிரமிக்க முயன்று வருகின்றனர். இதனால் இந்திய ராணுவம் 24 மணி நேரமும் இந்த இடத்தை பாதுகாத்து வருகின்றது. இந்த இடத்தில் குளிர் அதிகபட்ச மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் என்பதால், அங்கே உயிர் வாழ்வதே மிகக் கடினம். இப்படி இருந்தும் இந்த இடத்தில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வளவு கடினங்கள் நிறைந்த பகுதியில் கடந்த ஜனவரி மாதம் பாதுகாப்பு பணிக்காக பெண் ராணுவ அதிகாரி ஒருவர் முதல் முறையாக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தற்போது சியாச்சின் என்ற பகுதியில் மற்றொரு பெண் மருத்துவ அதிகாரி ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். இதனால் சியாச்சனில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் மருத்துவ அதிகாரி என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது. இதை இந்திய ராணுவம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
மிகவும் குளிர் நிறைந்த சியாச்சின் பகுதியில் வீரர்களுக்கு உறைபனி பாதிப்பு எளிதில் ஏற்பட்டுவிடும். வீரர்கள் அணிந்திருக்கும் ஷூவில் பணி நுழைந்துவிட்டால் உறைந்துபோய் உணர்வற்றுப் போகும். அந்த நேரத்தில் வீரர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையேல் அந்த பகுதி முழுமையாக பாதிக்கப்பட்டு வெட்டி எடுக்கும் நிலை ஏற்படலாம்.
இந்த அளவுக்கு அதிகப்படியான சவால் நிறைந்த இடத்தில் பெண்கள் பணியமற்றப்படுவது இதுவே முதல் முறையாகும். இதனால் அங்கே பொறுப்பேற்றுள்ள பாத்திமா வாசிமுக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இனி பெண்கள் எல்லா துறையிலும் சாதித்துக் காட்டுவார்கள் என்பதனை பறைசாற்றும் வகையில் உள்ளது இந்த நிகழ்வு.