
சதுப்பு நிலங்கள் என்பது நிலமும், நீரும் இணையும் பகுதிகளில் காணப்படும் ஒருவகை ஈரநிலங்கள் ஆகும். இவை பெரும்பாலும் சதுப்பு நிலக்காடுகள், நன்னீர் சதுப்பு நிலங்கள் மற்றும் உவர்நீர் சதுப்பு நிலங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. சதுப்பு நிலங்கள் பல சமூகங்களுக்கு பாரம்பரிய மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை பல சமூகங்களின் வாழ்வாதாரமாக உள்ளன. பல வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு புகலிடமாக விளங்கும் இவை புயல்கள், சுனாமிகள் மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்களை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மேலும் இவை நில அரிப்பை தடுக்கின்றன மற்றும் நீரின் தரத்தை மேம்படுத்துகின்றன.
தமிழ்நாடு வனத்துறை சதுப்பு நிலங்களை மீட்டெடுக்கவும், அதனை மறு சீரமைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் சென்னையில் அடையாறு, எண்ணூர் பகுதியில் சதுப்பு நிலங்கள் மறுசீரமைக்கப்பட்டு, அந்த பகுதிகளுக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சிகளில் வனத்துறை முழு மூச்சில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளது.
இதேபோல், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள சதுப்பு நிலங்களையும் வனத்துறை சீரமைத்து இருக்கிறது. முத்துப்பேட்டையில் ஆறுகளும், கடலும் சேரும் பகுதியில் 1 லட்சத்து 2020 ஹெக்டேர்ப் பரப்பளவில் அலையாத்தி காடுகள் பரவியுள்ளன.
பறவைகள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்து வந்த இந்த பகுதியில் கஜா புயலால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்துச் சதுப்பு நிலக் காடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இப்பகுதியில் மரங்களைப் பராமரிக்கும் பணியை வனத்துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, காடுகளையும் வளங்களையும் பாதுகாக்க கடந்த மூன்று ஆண்டுகளில் மீன் முள் வடிவில் கால்வாய் வடிவமைப்புகளுடன் சதுப்பு நிலங்களை உருவாக்கி சாதனை படைத்து இருக்கின்றனர். இது தமிழ்நாடு வனத்துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சதுப்புநிலத் தோட்டத்திற்கான அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட முறையாகும்.
இது உப்புநீர், ஊட்டச்சத்துகள் மற்றும் சதுப்பு நில உயிரினங்களுக்கு தேவையான நீரை வெளியேற்றக்கூடிய இயற்கையான அமைப்பை கொண்டதாக இருக்கும் என வனத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இது சதுப்புநில உயிர்வாழ்விற்கு இன்றியமையாதது.
இதுமட்டுமல்லாமல், பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் திருவாரூர் முத்துப்பேட்டையில் மட்டும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட சதுப்புநில முளைகளை நட்டு 1,350 ஹெக்டேரில் புதிய சதுப்பு நில தோட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதன் பிரத்யேக ட்ரோன் காட்சிகளை வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த மீன் முள் வடிவ வாய்க்கால் அமைப்பு, மீன்வளர்ப்பை ஊக்குவிப்பதற்காகவும், நீர்ப்பாசனத்தை எளிதாக்குவதற்கும் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.