ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை மீன் பிடி தடைக்காலம் என அறிவிக்கப்பட்டு அந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தடைக்காலம் மீன்களின் இனப் பெருக்கக் காலமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், கடந்த அறுபது நாட்களாக அமலில் இருந்த மீன் பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவோடு முடிவுக்கு வருகிறது. இந்தத் தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களது வலை மற்றும் படகுகள் உள்ளிட்ட மீன் பிடி சாதனங்களை பழுதுபார்த்து தயார்படுத்திக்கொள்ளவும் ஏதுவாக உள்ளது.
இன்றோடு முடிவுக்கு வரும் இந்த மீன் பிடி தடைக்காலத்தைத் தொடர்ந்து, நாகை மாவட்டத்தில் மட்டும் சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். நாகை துறைமுகத்தில் இருந்து நம்பியார்நகர், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மற்றும் நாகூர் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 500 விசைப் படகுகள் மற்றும் ஐந்தாயிரம் பைபர் படகுகளுடன் கடலுக்குச் செல்ல இருப்பதால், அவர்களுக்குத் தேவையான டீசல், ஐஸ் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களையும், தளவாடப் பொருட்களையும் படகுகளில் ஏற்றி வந்து கொண்டு இருக்கின்றனர்.
மீன் பிடி தடைக்காலத்தில் வருமானம் இன்றி வீட்டில் முடங்கிக் கிடந்துவிட்டு நாளை முதல் கடலுக்குச் செல்வதால், நிறைய மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிகை தங்களுக்கு இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். மேலும், டீசல் விலை உயர்வால் கடலுக்குச் செல்லும் தங்களுக்குப் போதிய லாபம் கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளதாகவும், தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான படகுக்கான டீசலை தமிழ்நாடு அரசு தங்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.