நாட்டின் 18 வது நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களுக்கு இடையே நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு 3 முறை தொடர்ச்சியாக நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுபோன்ற ஒரு சாதனையை செய்ய பா.ஜ.க. தயாராகி வருகிறது.
யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இவை தவிர ஆந்திர மாநிலம், அருணாச்சல பிரதேசம், ஓடிஸா, சிக்கிம், ஹரியாணா, மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
புத்தாண்டில் ஜனவரி மாதத்தின் முக்கிய நிகழ்வாக அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலய திறப்பு விழா, பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் நடைபெற உள்ளது.
இதுதவிர இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று பிரெஞ்சு அதிபர் இமானேவேல் மாக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கெளரவிக்க உள்ளார்.
இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்த ஆண்டு ககன்யான், மங்கள்யான்-2, சுக்ரயான்-1 உள்ளிட்ட பல்வேறு விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது. மேலும் நாஸா விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
2023 ஒருநாள் சர்வதேச உலக கோப்பை போட்டியில் நூலிழையில் தோற்ற இந்தியா, தோல்விகளை மறந்துவிட்டு 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி-20 உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகி வருகிறது. இந்த ஆண்டு டி20 உலக கோப்பை போட்டிகள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகிறது. முதல் முறையாக 20 அணிகள் பங்கேற்கின்றன. வங்கதேசத்திலும் மகளிர் டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன.
இவை தவிர உஸ்பெகிஸ்தானில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.