அதிமுக ஆட்சியில் 182 ஏக்கர் நில மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது!

அதிமுக ஆட்சியில் 182 ஏக்கர் நில மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது!
Published on

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான 182 ஏக்கர் நிலங்களை கடந்த 2016-18ம் ஆண்டு காலகட்டத்தில் மோசடி செய்து தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் விசாரணை மேற்கொண்டார். இதில், மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலங்களை அதிகாரிகள் துணையுடன் சிலர் அபகரித்திருப்பது தெரிய வந்தது.

மோசடி நிலங்கள் 'அ' பதிவேட்டில் கணினி மூலம் திருத்தம் செய்து மோசடி பட்டா வழங்கப்பட்டதும், அதன் மூலம் அரசு நிலங்களை அபகரிக்க அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 182 ஏக்கர் நிலங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை கலெக்டர் முரளிதரன் ரத்து செய்தார். அதையடுத்து அந்த நிலங்கள் மீண்டும் அரசுடைமை ஆக்கப்பட்டன.

இந்த மோசடி தொடர்பாக பெரியகுளம் ஆர்.டி.ஓ.க்களாக பணிபுரிந்த ஜெயபிரதா, ஆனந்தி, தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், மண்டல துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவிகாந்தி, நிலஅளவையர்கள் பிச்சைமணி, சக்திவேல், வடவீரநாயக்கன்பட்டி வி.ஏ.ஓ சுரேஷ், நில அளவை உதவியாளர் அழகர், மண்டல துணை தாசில்தாரின் உதவியாளர் ராஜேஸ்கண்ணன், நிலத்தை அபகரித்த அ.தி.மு.க. பிரமுகர் அன்னப்பிரகாஷ், முத்துவேல்பாண்டியன், போஸ் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்து ஏழு பேரை கைது செய்தனர். அவர்கள் தற்போது ஜாமீனில் வெளியில் வந்துவிட்டனர்.

அதன் பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த வி.ஏ.ஓ சுரேஷ் உள்ளிட்ட ஐந்து பேரை, டி.எஸ்.பி.சரவணக்குமார், இன்ஸ்பெக்டர் சித்ரா ஆகியோர், தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வி.ஏ.ஓ. சுரேஷ் உள்பட நிலத்தை வாங்கியவர்கள் என ஐந்து பேரும் நில மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com