
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் விழா வரும் ஜூன் மாதம் 3ம் தேதி திமுகவினரால் விமரிசையாகக் கொண்டாடப்பட இருக்கிறது. கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளான இதை, தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி ஜூன் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தவிருப்பதாக தோட்டக்கலைத்துறை அறிவித்து இருக்கிறது.
சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்திருக்கும் செம்மொழி பூங்காவில் இந்த மலர் கண்காட்சி இரண்டாவது ஆண்டாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மலர் கண்காட்சிக்காக பெங்களூரு, உதகை மற்றும் திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மலர் வகைகள் கொண்டுவரப்பட்டு இந்த மலர் கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.
‘பொதுமக்கள் இந்த மலர் கண்காட்சியை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கண்டு ரசிக்கலாம்’ என்றும், இதற்குக் கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். இவை தவிர, கேமராவுக்கு 50 ரூபாயும், வீடியோ பதிவு செய்ய 100 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும் என தோட்டக்லைதுறை அறிவித்து இருக்கிறது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மலர் கண்காட்சிக்குக் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இந்த ஆண்டும் இந்த மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்த மலர் கண்காட்சி நடைபெறும் செம்மொழி பூங்காவில் ஏற்கெனவே அரிய வகை மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் பள்ளிகள் ஜூன் மாதம் 7ம் தேதிதான் திறக்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் சூழலில் சென்னையில் மலர் கண்காட்சி வரும் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெறுவது, மாணவர்கள் தங்கள் குடும்பத்தோடு சென்று பொழுதைக் கழிக்க நல்ல வாய்ப்பாக அமையவிருக்கிறது.