சென்னையில் பறக்கும் ரயில் சேவை ரத்து?!

சென்னையில் பறக்கும் ரயில் சேவை ரத்து?!
Updated on

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து எழும்பூர் வரை நான்காவது ரயில் பாதை அமைக்க இருப்பதால், ஜூலை மாதம் முதல் அடுத்த ஏழு மாதங்களுக்கு கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. தமிழகத் தலைநகர் சென்னையில் பறக்கும் ரயில் சேவை கடந்த 1997ம்ஆண்டு முதன்முதலாக சென்னை கடற்கரை – மயிலாப்பூர் இடையே 9 கிலோ மீட்டர் தொலைவுக்குத் 266 கோடி ரூபாயில் தொடங்கப்பட்டது. பின்னர் அதுவே வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், பறக்கும் ரயில் சேவை வழித்தடங்களில் இருக்கும் ரயில் நிலையங்களை மெட்ரோ ரயில் நிலையங்களின் தரத்துக்கு மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே, மூன்றாவது கட்டமாக வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பாதை அமைக்கும் திட்டம் 2008ம் ஆண்டே தொடங்கப்பட்டு, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தில் ஆதம்பாக்கம் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை காரணமாக பணிகளைத் தொடங்க முடியாத நிலை இருந்தது. தற்போது, அந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதம் இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவு பெறும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, நான்காவது வழித்தடமாக சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பறக்கும் ரயில் சேவையை வழங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான கட்டுமான பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளன. இதன் காரணமாக, அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி வரை சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான ரயில் சேவை வழக்கம் போல் தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் ஐடி நிறுவனப் பணியாளர்கள் அதிக அளவில் பயணிப்பதால், முடிந்த அளவுக்கு குறிப்பிட்ட காலத்தில் இந்த வழித்தடத்தில் மீண்டும் பழையபடி ரயில்களை இயக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com