இலங்கையைத் தொடர்ந்து பொருளாதார பாதிப்பில் பாகிஸ்தான்!

இலங்கையைத் தொடர்ந்து பொருளாதார பாதிப்பில் பாகிஸ்தான்!

டந்த சில மாதங்களில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலை அந்நாட்டை எந்தளவுக்கு சீர்குலைத்தது என்பதை உலக நாடுகளே கண்டு வியந்தன. அந்த வரிசையில் தற்போது பாகிஸ்தானும் கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருக்கிறது. அதற்கு உதாரணம்தான் அந்நாட்டில் திறந்திருக்கம் மிக சொற்ப பெட்ரோல் பங்குகளில் வரிசைகட்டி நிற்கும் வாகனங்களின் அணிவகுப்பு. இதைக் குறித்துப் பேசும் அந்நாட்டு ஊடகங்கள் இலங்கையைப் போல் தங்கள் நாடும் மோசமடைந்து வருவதாகத் தெரிவித்து வருகின்றன.

லாகூர், பைசலாபாத் மற்றும் குஜ்ரன்வாலா ஆகிய நகரங்களில் ஏற்கெனவே பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. இதர நகரங்களிலும் பெட்ரோல் பங்குகளிலும் வாகனங்கள் பெட்ரோல் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. அதோடு வரிசையில் நிற்பவர்களுக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் குறிப்பிட்ட அளவிலேயே வழங்கப்படுகின்றன. அதோடு, பைக்குக்கு 200 ரூபாய்க்கும் லாரிக்கு 5,000 ரூபாய்க்கும் மட்டும்தான் எரிபொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி, எரிபொருள்கள் கருப்பு நிறத்தில் தரமற்று இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்நாட்டு பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் முசாதிக் மாலிக், "பெட்ரோல் தட்டுப்பாடு உள்ளதாக பலர் கூறுகின்றனர். அப்படி எதுவும் இங்கு கிடையாது. அடுத்த இருபது நாட்களுக்கு வேண்டிய பெட்ரோல் தற்போது கையிருப்பில் உள்ளது" என்று அவர் கூறியுள்ளார். அதேபோல், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, எரிபொருள் விலையுயர்வு, பணவீக்கம் என பாகிஸ்தான் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஆனால் இதை பாகிஸ்தான் அரசு தற்போது வரை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தானிடம் 3.67 பில்லியன் டாலர்கள் (மூன்று லட்சம் கோடி ரூபாய்) அந்நிய செலாவணி மட்டுமே கையிருப்பு உள்ளது. இது அடுத்த மூன்று வாரத்துக்குக் கூட தாக்குப்பிடிக்காது என்பதுதான் நிதர்சனம். இது இப்படியே நீடித்தால் பாகிஸ்தானும் இலங்கையை போலவே பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த நிலையை மாற்ற அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தேவையின்றி மின்சாரத்தை செலவிட வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு, இரவு பத்து மணிக்கு மேல் ஷாப்பிங் மால்கள், திருமண மண்டபங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு அதிகாரிகளுக்கான உதவியாளர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட அளவு நிதி சேமிக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எது எப்படியாயினும், IMF வழங்கும் நிதிதான் பாகிஸ்தானை இந்த நெருக்கடியிலிருந்து ஓரளவு காப்பாற்றும் என்பது பொருளாதார ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com