தமிழகத்தைத் தொடர்ந்து தெலங்கானாவிலும் நிலுவை மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிய கவர்னர் தமிழிசை!

தமிழகத்தைத் தொடர்ந்து தெலங்கானாவிலும் நிலுவை மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிய கவர்னர் தமிழிசை!

மிழ்நாட்டைப் போன்றே தெலங்கானாவிலும் அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சில மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நீண்ட நாட்கள் கிடப்பில் போட்டு இருப்பதாக அம்மாநில ஆளுங்கட்சி சார்பில் பல்வேறு புகார்கள் எழுந்தன.

கடந்த சில மாதங்களாகவே தெலங்கானா மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் பல்வேறு மசோதாக்களின் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக, அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜக்கு எதிராக தெலங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், ’தெலங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பத்து மசோதாக்கள் கவர்னர் அலுவலகத்தில் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாகியும் எந்த ஒரு தகவலும் இல்லாமல் நிலுவையில் உள்ளதாகவும், இது குறித்து மீண்டும் மீண்டும் கவர்னரிடம் நினைவூட்டப்பட்ட போதிலும் அவை கண்டுகொள்ளப்படவில்லை’ எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தெலங்கானா அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க சில மணி நேரங்களே இருந்த சூழலில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மூன்று மசோதாக்களுக்கு அனுமதி வழங்கி ஒப்புதல் அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இன்னும் நிலுவையில் உள்ள மற்ற மசோதாக்களின் நிலை குறித்த அறிவிப்பை கவர்னர் அலுவலகம், தெலங்கானா அரசுக்கு அனுப்பி இருப்பதாகவும் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதில் இரண்டு மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் , மூன்று அவரது தீவிரப் பரிசீலனையில் இருந்து வருவதாகவும், மேலும் இரண்டில் அரசிடம் விளக்கங்கள் கேட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும், தெலங்கானா அரசு தொடர்ந்த வழக்கின் உச்சநீதிமன்ற விசாரணையை கருத்தில் கொண்டுதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தாலும், முக்கியத்துவம் இல்லாத மூன்று மசோதாக்களுக்குத்தான் கவர்னர் தமிழிசை சௌந்தராஜன் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com