சீனாவில் உயரமான பாலத்திலிருந்து குதித்து பெண்ணை காப்பாற்றிய உணவு டெலிவரி ஊழியர்!

சீனாவில் உயரமான பாலத்திலிருந்து குதித்து பெண்ணை காப்பாற்றிய உணவு டெலிவரி ஊழியர்!
Published on

சீனாவில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் 12 மீட்டர் உயர பாலத்திலிருந்து குதித்து நீரில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றியுள்ளார்.

பெங் குங்லின் என்ற அந்த ஊழியர் ஜூன் மாதம் 13 ஆம் தேதி வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவு கொண்டு சென்றபோது குயாங்டாங் நதியில் மூழ்கிய ஒரு பெண் உயிருக்கு போராடுவதைப் பார்த்தபோது இந்த சம்பவம் நடந்தது.

இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. 31 வயதான பெங் குங்லின், நீரில் மூழ்கிய பெண்ணை மீட்கும் முயற்சியாக பாலத்தின் சுவர்களிலிருந்து தண்ணீரில் குதிப்பதை விடியோவில் காண முடிகிறது. தண்ணீரில் குதித்த அந்த நபர், அப்பெண் இருக்குமிடத்திற்கு நீந்திச் சென்று அவரை அருகில் உள்ள ஏணிக்கு அழைத்துச் சென்றார்.

இதையடுத்து போலீஸாரும் மீட்பு படகுகளும் அந்த இடத்திற்கு 10 நிமிடங்களில் விரைந்து வந்து அவர்களை மீட்டனர். உயிர் பிழைத்த அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக சீனா ப்ளூ செய்தி நிறுவனத்துக்கு குங்லின் அளித்த பேட்டியில், “முதலில் நான் உயரமான பாலித்திலிருந்து குதிக்க தயங்கினேன். ஆனாலும் துணிச்சலுடன் தண்ணீரில் குதித்து அப்பெண்ணை காப்பாற்றினேன்.

அந்த பாலம் உயரமாக இருந்தது. தண்ணீரில் குதிக்க நினைத்தபோது எனது கால்கள் நடுங்கின. நான் தண்ணீரில் குதித்து அந்த பெண்ணை காப்பாற்றாவிட்டால் அவர் நீரில் மூழ்கி இறந்துவிடுவார் என்று தெரிந்ததும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு துணிச்சலுடன் தண்ணீரில் குதித்தேன். உயிரைவிட விலைமதிப்புள்ளது வேறு எதுவும் இல்லை” என்று அவர் கூறினார்.

தண்ணீரிலிருந்து மேட்டுப் பகுதிக்கு வந்ததும் அந்த ஊழியர். “இன்றைக்கு நான் டெலிவரி செய்ய வேண்டிய உணவு தாமதப்படும்” என்று சொன்னதாக சம்பவ இடத்தில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். காலதாமதம் ஏற்பட்டால் அபராதம் விதிப்பார்கள் என்பதால் உடனடியாக உணவு டெலிவரியை முடித்ததாக குங்லின் கூறினார். ஆனாலும், அவர் பணிபுரியம் நிறுவனம் நிலைமையை புரிந்து கொண்டு தாமதமாக உணவு டெலிவரி செய்ததற்கு காரணங்களை கேட்கவில்லையாம்.

இதனிடையே இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. குங்லினின் சமயோசிதம் மற்றும் துணிச்சலை பலரும் பாராட்டினர்.

ஹாங்ஸு போலீஸ் நிர்வாகம் அவரது செயலை பாராட்டி அவருக்கு “நல்லெண்ணத்துடன் உதவி செய்பவர்” என்ற பட்டத்தை வழங்கியதுடன் 30,000 யுவான் (ரூ.3,43,180) பரிசாக அளித்தது. அவர் பணி செய்யும் நிறுவனமும் 50,000 யுவான் (ரூ.5,71,826) ரொக்கப்பரிசு வழங்கியதுடன் அவரது கல்லூரி படிப்புச் செலவை ஏற்கவும் முன்வந்துள்ளது.

இதனிடையே குங்லின் காப்பாற்றிய பெண் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். மிகுந்த மன அழுத்தம் காரணமாக நதியில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக அப்பெண் தெரிவித்துள்ளார். எனினும் அவரை காப்பாற்ற முயன்று தண்ணீரில் குதித்த போது குங்லினுக்கு காலில் லேசான தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்றார். அவரை 10 நாட்கள் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நான் வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் சாதாரண ஊழியர். ஆபத்தில் யாரையாவது சந்தித்தால் நிச்சயம் உதவிக்கரம் நீட்டுவேன் என்றார் குயிங்லின்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com