நாடு முழுவதும் பிளாஸ்டிக் கேன்களில் (Canned water) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பெரும்பாலும் 20 லிட்டர் கொள்ளளவில் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அந்த வகையில் சுத்தமான குடிநீருக்கு தரமான நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதும், கேன் தயாரிப்பு தேதி மற்றும் சுகாதாரத்தை சரிபார்ப்பதும் மிகவும் முக்கியமாகும். அதாவது, கேன் வாட்டர் வாங்கும் போது அது ஐஎஸ்ஐ (ISI) முத்திரை உள்ளதா என்றும், காலாவதி தேதி கடந்துவிட்டதா என்றும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் பலமுறை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கேன்கள் ஆரோக்கியத்திற்கு தீங்களிக்கலாம், எனவே சுத்தமான மற்றும் தரமான கேன்களை தேர்வு செய்ய வேண்டும்.
இந்நிலையில் தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில்கொண்டு குடிநீர் கேன்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து தீவிரமாக ஆய்வு செய்ய தமிழக உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
20 லிட்டர் குடிநீர் கேன்களில் பாசி பிடித்தல், அசுத்தம், தரமற்ற நிலை போன்றவை கண்டறியப்பட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை மாநகராட்சி, உணவு பாதுகாப்புத் துறை, குடிநீர் வழங்கல் துறை ஆகியவை இணைந்து சிறப்பு ஆய்வுக் குழுக்களை அமைத்துள்ளன. ஒவ்வொரு கேனிலும் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, FSSAI உரிம எண் ஆகியவை தெளிவாக இடம்பெற்றிருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. பாசி பிடித்த கேன்கள், அசுத்தமான கேன்கள், மறுசுழற்சி வரம்பை மீறிய கேன்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது உடனடி அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குடிநீர் கேனை அதிகபட்சமாக 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக் கூடாது என்ற விதி மீறப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குடிநீர் கேன்களை நேரடியாக சூரிய ஒளியில் தேக்கி வைக்கக் கூடாது என்றும், கால்சியம் (10–75 மி.கி/லிட்டர்), மெக்னீசியம் (5–30 மி.கி/லிட்டர்) போன்ற தாதுக்கள் சரியான அளவில் இருக்க வேண்டும் என்றும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் முறையான அனுமதி, தரச் சான்றிதழ் இன்றி செயல்படும் குடிநீர் ஆலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள குடிநீர் நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், கடை உரிமையாளர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிகளவு தண்ணீர் தேவைப்படும் கோடை காலத்தில் குடிநீர் தரத்தில் ஏற்படும் குறைபாடுகள் பொதுமக்களின் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த நடவடிக்கை மிகவும் தேவையானதாக கருதப்படுகிறது.