கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பீலேவின் உடலுக்கு ரசிகர்களும், உலக மக்களுக்கும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இவரின் முழு பெயர் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ. இவர் சர்வதேச போட்டியில் அதிக கோல்கள் அடித்து மகுடம் சூடியவர். அதிக கோல்கள் அடித்த தரவரிசையில் இவர் 10-வது இடத்தில் உள்ளார்.பீலேவின் உடல் அடங்கிய சவப்பெட்டி இன்று அங்குள்ள தெருக்களின் வழியாக எடுத்து செல்லப்பட உள்ளது. அவரது தாயார் 100 வயதான செலிஸ்டி அரன்டெஸ் வசிக்கும் இல்லத்தையும் கடந்து செல்ல உள்ளது. படுத்த படுக்கையாக உள்ள தாயார், மகன் இறந்த தகவலைக்கூட புரிந்து கொள்ளும் மனநிலையில் செலிஸ்டி இல்லை.
கால்பந்து ஆட்டத்தில் மூன்று முறை உலகக்கோப்பை வென்ற ஜாம்பவான், கடந்த 29ந்தேதி, தனது 82 வயதில், புற்றுநோயால் காலமானார். ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரரை இந்த உலகம் இழந்து விட்டது. அவரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது மறைவிற்கு பிரேசில் நாட்டில் மூன்று தினங்கள் துக்கம் அனுஷ்டிக்கப் படுகிறது.
இந்நிலையில், இன்றுகாலை, 'சாவபாலோ' மருத்துவமனையிலிருந்து, எடுத்துச் செல்லப்பட்டு, 'சாண்டோசில்' உள்ள 'விலாபெல்மிரா' எனும் ஸ்டேடியத்தில், மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப் பட்டுள்ளது. அங்கு திரளான மக்கள், பிரேசிலுக்குப் பெருமை சேர்த்த, 'கருப்பு முத்து' என்றழைக்கப்பட்ட, பீலேவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறுதியில், 4.4 ஏக்கர் பரப்பளவில், பிரம்மாண்டமாய் அமைந்துள்ள, 14 அடுக்கு மாடிகளைக் கொண்ட, 'நெக்ரோ போல் எகுமேனியா' நினைவுக் கல்லறைத் தோட்டத்தில், அவரது உடல், அடக்கம் செய்யப்படுகிறது.அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அழைப்பில்லை.
பீலே மண்ணில் புதைக்கப்படப் போவதில்லை. எதிர்காலத்தில் இவரை போல சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்க விதைக்கப்படப் போகிறார்.