
தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஆண்டு சென்னையில் 44வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் சர்வதேச அளவில் 185க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 114 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், 2023ம் ஆண்டுக்கான ஆசிய செஸ் கூட்டமைப்பின், ‘சிறந்த மனிதருக்கான விருது’ தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியதைப் பாராட்டும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் (X) பக்கத்தில், ’’முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய வழிகாட்டலில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை உலகமே வியக்கிற வகையில் தமிழக அரசு நடத்தியது. இதனைப் போற்றுகிற வகையில், தமிழக முதலமைச்சருக்கு 2023ம் ஆண்டுக்கான ஆசிய செஸ் கூட்டமைப்பின், ‘சிறந்த மனிதருக்கான விருதினை’ (Man of the Year Award) ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் பரத் சிங் செளகான் உள்ளிட்டோர் இன்று வழங்கினார்கள். இந்த பெருமைமிகு நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தோம்’’ என்று தெரிவித்து இருக்கிறார்.