விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ந்திய விடுதலைப் போராட்ட வீரரும், மிகச் சிறந்த பொதுவுடைமைத் தலைவருமான சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “சுதந்திரப் போராட்டத் தியாகியும், மிகச் சிறந்த பொதுவுடைமைத் தலைவராகவும் திகழும் மரியாதைக்குரிய சங்கரய்யாவுக்கு தமிழ்நாடு அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ‘தகைசால் தமிழர்‘ என்ற விருதினை வழங்கி கவுரவித்தது.

இன்று 102வது பிறந்த நாள் காணும் பெரியவர் சங்கரய்யா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்ற பொழுது ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் காரணமாக அவர் கல்லூரித் தேர்வினை எழுத முடியவில்லை. இந்தியா விடுதலை பெறுவதற்கு 12 மணி நேரங்களுக்கு முன்பாகதான் 1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ம் தேதியன்று அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பது வரலாறு.

ஏழை, எளிய மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவரும், தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவரும், ஒரு மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியுமான சங்கரய்யாவுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அதன் அடிப்படையில், மரியாதைக்குரிய சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆவன செய்யப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்” என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com