உலகின் தலைசிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. செளதி அரேபியாவின் அல்-நாஸர் கால்பந்து சங்கத்துக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது ரியாத்தில் சொகுசு ஹோட்டலில் தங்கியிருக்கும் அவர், இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் செளதி அணிக்காக உடனடியாக விளையாட முடியவில்லை.
எனினும் ரொனால்டோ செளதி அதிகாரிகளுடன் உணவு சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற படங்கள் விடியோவாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஆனால், அவரது சொந்த வாழ்க்கை செளதியில் விவாதப் பொருளாகி இருக்கிறது. ரொனால்டோ தற்போது ஜார்ஜினா என்பவருடன் “லிவ் இன்” பார்டனராக இருந்து வருகிறார். செளதியில் நடைமுறையில் உள்ள ஷிரியத் சட்டத்தில் இதற்கு அனுமதி இல்லை.
செளதி அரேபியாவில் திருமணமாகாமல் கணவன் மனைவியாக வாழ்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
செளதி அரேபியா வந்த ரொனால்டோவுக்கு அளிக்கப்பட்ட பிரம்மாண்டமான வரவேற்பில் அவரது லிவ் இன் பார்டனர் ஜார்ஜினா அபாயா, இஸ்லாமிய உடையில் கலந்துகொண்டார்.
வழக்கமாக ஹோட்டல் அறையில் ஆணும் பெண்ணும் தங்கும்போதோ அல்லது வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டை யாருக்காவது வாடகைக்கு விடும்போதே அவர்களிடம் ஆவணச் சான்று கேட்கப்படும். ஷரியத் சட்டத்தை மீறினால் தண்டனை வழங்கப்படும்.
ஆனால், வெளிநாட்டினர் விஷயத்தில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மென்மையான போக்கை செளதி அரசு கடைப்பிடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
2019 ஆம் ஆண்டில் செளதி அரேபியாவின் விசாக் கொள்கை தளர்த்தப்பட்டது. அதன்படி திருமணமாகாமல் சேர்ந்து வாழும் ஜோடிகளுக்கும் ஹோட்டலில் தங்க அனுமதி வழங்கப்படும். ஆனால், ஆண்களும், பெண்களும் தனித்தனி அறையில் தங்க வேண்டும்.
முன்பு ஹோட்டல் அறையில் தங்குவதற்கு தம்பதிகள் திருமணச் சான்றிதழை காட்ட வேண்டும். ஒருவேளை ரொனால்டோவும் ஜார்ஜினாவும் செளதியில் நீண்டகாலம் தங்க வேண்டியிருந்தால் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படாது. ஆனால், அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு சலுகைகள் அளிக்கப்படலாம் என்று வழக்குரைஞர்களும் சட்ட நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரொனால்டோ சிறந்த கால்பந்தாட்ட வீரராக இருப்பது அவரை சட்ட நடவடிக்கையிலிருந்து காப்பாற்றக்கூடும். திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை இப்போது அரசு கண்டு கொள்வதில்லை என்றும் ஏதாவது பிரச்னை என்றால்தான் சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும் வழக்குரைஞர் தெரிவிப்பதாக ஸ்பானிஷ் செய்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.
ரொனால்டோ-ஜார்ஜியானா இடையிலான உறவு ஏழு ஆண்டுகளாக நீடிக்கிறது. 2016 ஆம் ஆண்டிலிருந்து அவர்கள் லிவ் இன் பார்டனராக வாழ்ந்து வருகின்றனர். திருமணம் செய்துகொள்ளாத அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.