தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக 4 பெண்களுக்கு அமைச்சரவையில் இடம்..!

Tamilnadu cabinet
Tamilnadu cabinet image source:Dailythanthi
Updated on

74 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக முதலமைச்சர் ஜோசப் சி. விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 4 பெண்களுக்கு இடமளிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள 23 பெயர்கள் கொண்ட அமைச்சரவை பட்டியலில் மூன்று பெண்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழக அமைச்சரவையில் பட்டியலினத்தவர்கள் 7 பேருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 10ஆம் தேதி முதல்வராக விஜய் பதவியேற்ற போது 9 அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர். அப்பொழுது சிவகாசி எம்எல்ஏ கீர்த்தனா அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் இன்று நடைபெறும் அமைச்சரவை விரிவாக்கத்தில் தவெகவைச் சேர்ந்த மேலும் 3 பெண் எம்எல்ஏக்களுக்கு அமைச்சராக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவிநாசி எம்.எல்.ஏ. கமலி, குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி, ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி ஆகியோர் இன்று அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாடு அமைச்சரவையில் பெண்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்து புதிய சாதனை படைத்துள்ளது.

தவெக அமைச்சரவையில் முதலில் பதவியேற்ற சிவகாசி தொகுதியைச் சேர்ந்த எஸ். கீர்த்தனா தமிழ்நாட்டின் முதல் பெண் தொழில்துறை அமைச்சர் என்ற வரலாற்றுப் பெருமையையும் பெற்றுள்ளார்.

முன்னதாக 2011 - 2016 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் அதிகபட்சமாக 3 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றதே சாதனையாக இருந்தது. தற்போதைய அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலம் இந்த எண்ணிக்கை 4ஆக உயர்த்தப்பட்டு, பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் வரலாற்றில் பெண்களுக்கான அதிகாரப் பகிர்வில் மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்தப் பெண் அமைச்சர்கள் மூலமாக சமூக நலன், கல்வி மற்றும் தொழில்துறை மேம்பாட்டில் புதிய மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அரசியல் வட்டாரங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com