

மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி தமிழக அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மட்டுமல்லாது, இனி வரும் நூறாண்டுகளுக்குத் தமிழகத்தில் தவெகவின் ஆட்சியே அமையும் என்று மதுரை ஆதீனம் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
காஞ்சிபுரத்தில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த பல்வேறு முக்கிய கேள்விகளுக்கு அதிரடியான பதில்களை அளித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அரசியல் நிலவரம் குறித்துப் பேசிய மதுரை ஆதீனம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) மற்றும் அவரது அரசியல் நிலைப்பாடு குறித்து தனது முழு ஆதரவை வெளிப்படுத்தினார். தற்போதைய தவெக-வின் செயல்பாடுகள் மற்றும் அதன் அரசைப் பாராட்டிப் பேசிய அவர், இது ஒரு "அற்புதமான ஆட்சி" என்றும், அவர்களுக்கு எந்தவித ஆலோசனைகளும் சொல்லத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
‘ஆண்டவன் பெயரில் விஜய் பதவி ஏற்று இருப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது எனக் குறிப்பிட்ட அவர், லஞ்சம் வாங்கக் கூடாது என்றும், யாராவது லஞ்சம் கேட்டால் முதலமைச்சர் விஜய்யின் பெயரைச் சொல்லுங்கள் என்று விஜய் கூறிய கருத்து தன்னை மிகவும் கவர்ந்ததாகப் பாராட்டினார்.’
மேலும், இதுவரை தமிழகம் கண்டுள்ள முதலமைச்சர்களை விட விஜய் போன்ற ஒரு அற்புதமான தலைவரைத் தான் பார்த்ததில்லை என்றும், என்னுடைய முழுமையான ஆசி என்றும் தவெகவிற்கே இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
தொடர்ந்து விஜய் குறித்தான அடுத்தகட்ட நிகழ்வுகளைப் பற்றிப் பேசிய ஆதீனம், வரும் அக்டோபர் 11-ம்தேதி தமிழ்ச்சங்கம் சார்பில் நடத்தப்படும் விழாவில், முதலமைச்சர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடத் தனக்கு அழைப்பு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அவர் முதலமைச்சராக சும்மா நடிச்சிட்டு வரல, எவ்வளவு எல்லாம் கஷ்டப்பட்டாரு, அதனால் தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வந்திருக்காரு என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் இனி வரும் 100 ஆண்டுகளுக்கு தவெக தான் ஆட்சி அமைக்கும் என்றும், இடைத்தேர்தல்களிலும் அவர்களே வெற்றி பெறுவார்கள் என்றும் தொடர்ச்சியாகத் தமிழக வெற்றி கழகமே வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைக்கும் என்றும் மதுரை ஆதீனம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சேகர்பாபு செயல்பாடுகள் எல்லாம் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, ‘அதை மட்டும் கேட்காதீங்க. பட்டபாடு போதும்’ என்று கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் அமைச்சரின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்க வகையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் பணிகளைக் குறிப்பிட்டு, ‘தம்பி ரமேஷ் சிறப்பாகச் செயல்படுகிறார்’ என்று தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
ஆன்மீகப் பெரியவரான மதுரை ஆதீனம், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தவெக கட்சிக்கு ஆதரவாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் முன்னதாகப் பல்வேறு விவகாரங்களில் தவெக மற்றும் அதன் தலைவர் விஜய்க்கு எதிராக மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்த மதுரை ஆதீனம், தற்போது தவெக அரசுக்கும், அதன் துறை சார்ந்த அமைச்சரின் செயல்பாடுகளுக்கும் முழு ஆதரவு அளிக்கும் வகையில் பேசியிருப்பது அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.