

அமெரிக்காவில் உள்ள ‘போர்ப்ஸ்’ பத்திரிக்கை ஆண்டுதோறும் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான (2025) பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரத் துறைகளை வடிவமைத்ததற்காக அங்கீகரிக்கப்பட்ட நிர்மலா சீதாராமன், ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா மற்றும் கிரண் மஜும்தார் ஷா ஆகிய மூன்று இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் முதலிடம் பிடித்துள்ளார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் 24-வது இடத்தில் உள்ளார். 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாட்டின் பொருளாதாரக் கொள்கையை வடிவமைப்பதிலும் தேசிய நிதியை நிர்வகிப்பதிலும் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார்.
மத்திய பட்ஜெட்டை வழங்குவதற்கும் முக்கிய கொள்கைகளை சீர்திருத்துவதற்கும் சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார், மேலும் இந்தாண்டு பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ததையடுத்து, இந்திய வரலாற்றில் தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
HCLTech நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா இந்த பட்டியலில் 76-வது இடத்தில் உள்ளார். ரோஷிணி நாடார், Hurun 2025-ம் ஆண்டின் படி ரூ.2.8 லட்சம் கோடி ($31 பில்லியன்) தனிப்பட்ட நிகர மதிப்புடன், இந்தியாவின் பணக்கார பெண் தொழிலதிபர்களில் ஒருவராகவும், பொதுவில் பட்டியலிடப்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்தை வழிநடத்தும் முதல் பெண்மணியாகயும் உள்ளார். இவர், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஷிவ் நாடாரின் ஒரே மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டியலில் மூன்றாவது இந்தியரான கர்நாடகாவைச் சேர்ந்த 'பயோகான்' பயோகானின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், கிரண் மஜும்தார் ஷா, 83-வது இடத்தில் உள்ளார். $3.6 பில்லியன் நிகர மதிப்புடன், அவர் இந்தியாவின் மிகவும் பணக்கார சுய தொழிலதிபர் ஆவார். அவரது தலைமையின் கீழ், பயோகான் நீரிழிவு, புற்றுநோய் மற்றும் autoimmune diseases போன்ற நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க மலிவு விலையில், உயர்தர மருந்துகளை உற்பத்தி செய்கிறது. இது அவரை உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பில் ஒரு சக்திவாய்ந்த பெண்மணியாக உயர்த்தியுள்ளது.