திரைத்துறையை அச்சுறுத்தி வந்த பைரசி பிரச்சினை இப்போது ஒரு புதிய அத்தியாயத்தை எழுதி வருகிறது. திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மற்றும் ஓடிடி தளங்களை சட்டவிரோதமாக ஒளிபரப்பி பல கோடிகளைச் சுரண்டும் ஒரு சர்வதேச திருட்டுச் சதி சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன் மூளையாக இருப்பவர் ஹரியானாவை சேர்ந்த ஹர்பிரீத் சிங் ரந்தாவா என்பவர், இவர் தற்போது கனடாவில் தலைமறைவாக உள்ளார். பரிதாபாத் சைபர் குற்றப்பிரிவு இந்த வழக்கில் ஆழமான விசாரணையை தொடங்கியுள்ளது, இதன் மூலம் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
திரைப்படங்கள் வெளியாகும் மறுநாளே இணையத்தில் திருட்டு பிரதிகள் பதிவேற்றப்படுவது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தப் பைரசி தற்போது தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களையும் குறிவைத்து செயல்படுகிறது.
இதன் விளைவாக, ஆண்டுதோறும் ரூ.1,500 கோடி முதல் ரூ.2,500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சதியின் பின்னணியில் ஒரு நவீன தொழில்நுட்பமான ஐபி டிவி (இணையம் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்புதல்) பயன்படுத்தப்பட்டுள்ளது.
YuppTV நிறுவனம், Boss IPTV உள்ளிட்ட பல பைரசி நெட்வொர்க்குகளுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இந்த நெட்வொர்க்குகள் Star, Zee, Sony போன்ற பிரபல சேனல்களை சட்டவிரோதமாக ஸ்ட்ரீம் செய்வதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும், பயனர்களின் தனிப்பட்டத் தகவல்கள் திருடப்படுவதாகவும் YuppTV தெரிவித்துள்ளது.
ஐபி டிவி என்பது இணையம் மூலம் எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதியை வழங்கும் தொழில்நுட்பம்.
முறையான எப்டிவி நிறுவனங்கள் இந்திய தொலைக்காட்சி நிறுவனங்களிடம் அனுமதி பெற்று சந்தா அடிப்படையில் சேவை வழங்குகின்றன.
ஆனால், ஹர்பிரீத் சிங் தலைமையிலான சட்டவிரோத கும்பல், “பாஸ் ஐபி டிவி” என்ற பெயரில் அனுமதி இல்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்திய நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீம் செய்து வருகிறது.
விசாரணையின் மூலம் தெரியவந்த தகவல்களின்படி, ஹர்பிரீத் சிங் 2021-இல் பரிதாபாத் மற்றும் டெல்லியில் சேவை மையங்களை அமைத்து இந்த திருட்டு வலைப்பின்னலை தொடங்கினார்.
அங்கிருந்து இந்தியாவின் பிரபல பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு சேனல்களான ZEE, Epic, Colors, HBO, FLAME, BEA, BIBA போன்றவற்றை, மேலும் வெளிநாட்டு சேனல்களையும் சட்டவிரோதமாக ஒளிபரப்பினார்.
குறைந்த விலையில் இந்தச் சேவையை வழங்கியதால், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெருமளவு சந்தாதாரர்களாக மாறினர். இதன் மூலம், பாஸ் ஐபி டிவிக்கு மட்டும் 50 லட்சம் சந்தாதாரர்கள்கிடைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து, ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பாதித்ததாக போலீசார் கண்டறிந்துள்ளனர்.
2021-இல் எப்டிவியின் புகாரின் அடிப்படையில், பரிதாபாத் சைபர் குற்றப்பிரிவு பாஸ் ஐபி டிவி அலுவலகங்களில் சோதனை நடத்தியது.
இதில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட கணினிகளில் அமெரிக்கா மற்றும் கனடா வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த தகவல்கள் பிஷிங் மோசடி, போதைப்பொருள் வணிகம், மற்றும் பயங்கரவாத நிதியமைப்பு போன்ற குற்றங்களுக்கு பயன்படுத்தப்படலாம் என போலீசார் அச்சம் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், ஹர்பிரீத் சிங் “இந்திய ஐபி டிவி”, “குரு ஐபி டிவி”, “டாஷன் ஐபி டிவி”, “ஓஸ் ஐபி டிவி”, “பஞ்சாபி ஐபி டிவி”, “எட்மண்டன் ஐபி டிவி”, “பாஸ் எண்டர்டெயின்மென்ட்”, மற்றும் “அல்ட்ரா ஸ்ட்ரீம் டிவி” போன்ற பெயர்களில் உலகம் முழுவதும் சட்டவிரோத ஸ்ட்ரீமிங் நடத்தியது தெரியவந்துள்ளது.
இதன் விளைவாக, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளன.
எப்டிவி, அமெரிக்காவில் பாஸ் ஐபி டிவிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. அமெரிக்கச் சட்டப்படி, திருட்டுச் சேவைகளைப் பயன்படுத்துவது கடுமையான குற்றமாகும்.
ஹர்பிரீத் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தினால், இந்த திருட்டு சதியின் முழு அளவு மற்றும் புதிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக போலீசார் கருதுகின்றனர். இந்த வழக்கு தொலைக்காட்சி, ஓடிடி, மற்றும் திரைத்துறைக்கு எதிரான பைரசியை ஒழிப்பதற்கு ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையலாம்.