குன்னூர் அருகில் உள்ள பிளாக் பிரிட்ஜ் வனப்பகுதியில் கடந்த 12ம் தேதி திடீரென காட்டுத் தீ ஏற்பட்ட நிலையில் இன்று வரைத் தீயை அணைக்கமுடியாமல் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
நீலகிரியில் பல பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் காட்டுத் தீ வரும் அபாயம் உள்ளது என்றுப் பல முன்னேற்பாடுகளச் செய்து வந்தனர். அப்படியிருந்தபோதே குன்னூர் பகுதியில் கடந்த 12ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டுப் பரவி வருகிறது. இதனையடுத்து அன்றைய தேதியிலிருந்தே தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் இதுநாள் வரை அணைக்க முடியாததற்கு முக்கிய காரணம் வறட்சியால் ஏற்பட்ட காய்ந்த மரங்களும், அதிவேகமான காற்றும்தான். ஆகையால் காட்டுத் தீ பரவலை தீயணைப்பு வீரர்களால் எளிதாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.
கோவை, பொள்ளாச்சி, உடுமலை ஆகிய பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். மேலும் தன்னார்வலர்களும் அவர்களுடன் இணைந்துத் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். 12ம் தேதியிலிருந்து போராடியும் எந்த முன்னேற்றமும் இல்லாத சூழலில் இந்திய விமானப்படையின் உதவியை நாடியது வனத்துறை.
இரண்டு நாட்களாக கோவை மாவட்ட சூலூர் விமான தளத்திலிருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர். தீயின் பரவல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது என்றும், விரைவில் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவோம் என்றும் வனத்துறையினர் கூறுகின்றனர்.
மேலும் இதுத்தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, “குன்னூருக்கு அருகில் உள்ள பிளாக் பிரிட்ஜ் வனப்பகுதியின் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் மேற்கொண்ட பணியின் போதுத் தீ பரவி அது காட்டுத் தீயாக மாறியுள்ளது. தற்போதுவரை 40 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட வனப்பகுதி முற்றிலுமாக எரிந்து நாசமாகியிருக்கிறது.
காட்டுத் தீ ஏற்பட காரணமாக அமைந்த தேயிலைத் தோட்ட உரிமையாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். தீயை கட்டுப்படுத்த 4 நாட்களாகப் போராடி வருகிறோம். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் முழுவதுமாக அணைத்து விடுவோம். ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை ஊற்றி அணைத்து வருகிறோம்.”
இரண்டு நாட்களுக்கு முன்னர் வனத்துறை அதிகாரி ஒருவர் இவ்வாறு பேசினார். இன்று ஆறாவது நாளாக தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.