காடுகளும் நல்வாழ்வும்

சர்வதேச காடுகள் தினம்
காடுகளும் நல்வாழ்வும்
Published on

2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் சர்வதேச காடுகள் தினம் ஒன்று அனுசரிக்கப்படவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 21ம் தேதி சர்வதேச காடுகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

காடுகள் தினத்துக்கான இந்த ஆண்டின் மையக்கருத்து "காடுகளும் நல்வாழ்வும்" (Forests and Health) என்பதாகும். நாம் ஆரோக்கியத்துடன் நல்வாழ்வு வாழவேண்டுமானால் இந்த பூமியில் உள்ள காடுகளும் ஆரோக்கியமாக இருக்கவேண்டியது அவசியம். நமது பூமியின் பச்சை நுரையீரல்களாக விளங்கும் காடுகள், நமது காற்று மண்டலத்தில் இருக்கும் கார்பனை உறிஞ்சி காலநிலை மாற்றத்தின் தீவிரத்தன்மையைக் குறைக்கின்றன. நல்வாழ்வு தொடர்பான காடுகளின் சேவைகளையே இந்த மையக்கருத்து முன்வைக்கின்றது.

நிலவாழ் தாவரங்கள் மற்றும் விலங்குகளில் 80% காடுகளில்தான் வசிக்கின்றன.  ஒரு சாதாரண மரமே ஆண்டுக்கு 150 கிலோ கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகிறதாம். அப்படியானால் ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் உள்ள பெரிய காடுகள் எத்தனை கார்பனை உறிஞ்சும் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்! இப்படி உறிஞ்சப்படும் கார்பன் மூலம் பசுமைக்குடில் விளைவின் தீவிரத்தன்மை குறைகிறது.

உலக அளவில் 1.6 பில்லியன் மக்கள் காடுகளையே வாழ்வாதாரத்துக்காக நம்பியிருக்கின்றனர். காடுகளையே நம்பியிருக்கும் தொல்குடிகள் (Forest dwelling tribes) காடுகளைப் பாதுகாக்கும் முதல் அரண்களாகவும் விளங்குகின்றனர். ஒரு காட்டைப் பற்றிய முடிவு எடுக்கப்படும்போது, இவர்களின் நலனையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்தத் தொல்குடிகளின் உரிமைகளை நசுக்காமல் காடுகளைப் பாதுகாக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதே சூழல் செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இந்த தொல்குடி மக்களின் குழந்தைகளிடம் பேசிப்பாருங்கள், எத்தனை மரம், செடிகளின் பெயர்களை அவர்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள் என்று கேளுங்கள், ஆச்சரியமாக இருக்கும். நகரத்துக் குழந்தைகளுக்கு சராசரியான மரங்களே  தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் அவற்றின் ஆங்கிலப் பெயர்கள் மட்டுமே தெரிகின்றன. அவர்களிடம் மரங்களைப் பற்றிப் பேசுங்கள், அவற்றின் பண்புகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த சில தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். எதிர்காலத் தலைமுறைக்கு இயற்கையைப் பற்றிப் புரிதலை ஏற்படுத்துவோம் என்றும், ஒரு மரத்தைக் கூட நமது தேவைக்காக வெட்டமாட்டோம் என்றும் இந்தக் காடுகள் தினத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com