தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 72. தமிழ்நாடு முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மறைவுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர் நரேஷ் குப்தா.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான நரேஷ் குப்தா, தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக நீண்டகாலம் பணியில் இருந்தவர். 05.01.2005 முதல் 31.07.2010 வரை தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்துள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பணிகளை திறம்பட மேற்கொண்டவர். தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகிப்பதற்கு முன்பு, 2001-2002-இல் உள்துறைச் செயலராகவும், 2002-2005இல் மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் மற்றும் செயலராகவும் பணிபுரிந்துள்ளார்.
நரேஷ் குப்தா மறைவுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த சிரத்தையுடனும் நேர்மையுடனும் சேவையாற்றிய நரேஷ் குப்தா, மக்களால் சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவு கூறப்படுவார் என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்துறைச் செயலாளர், மாநிலத் திட்டக் குழுவின் செயலாளர் என பல உயர் பொறுப்புகளில் பணியாற்றி மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக விளங்கியவர் நரேஷ் குப்தா, காந்தியப் பற்றாளர் நரேஷ் குப்தாவை இழந்து வாடும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று மாலை, இறுதி சடங்கு நடைபெறுவதாக அவரது மகன் மகன் மனிஷ் குப்தா தெரிவித்துள்ளார்.