திமுக முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரி, வட்டாச்சியரை தாக்கிய வழக்கில் நேற்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக அப்போதைய மத்திய அமைச்சரான மு.க.அழகிரி, தென்மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக திமுகவினர் மீது அதிமுக சார்பில் தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து நேரில் அறிய மேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலராக இருந்த வட்டாச்சியர் காளிமுத்து சென்றபோது, அவருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வட்டாச்சியர் காளிமுத்துவை திமுக-வினர் தாக்கியுள்ளனர். இதையடுத்து வட்டாச்சியர் காளிமுத்து மதுரையில் கீழ்வளவு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர், மு.க.அழகிரி, முன்னாள் மேயர் மன்னன், ரகுபதி, திருஞானம், பொன்னம்பலம், கருப்பண்ணன், செந்தில், மயில்வாகனன், ராமலிங்கம், நாகராஜ், நீதிதேவன், போஸ், சோலை, தமிழரசன், சேகர், ராகவன், பாலு உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டது.
இந்த வழக்கு நேற்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி லீலாபானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் மு.க.அழகிரி உட்பட வழக்கு தொடர்பான 20 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரணையின் முடிவில் இந்த வழக்கை ஜனவரி 6-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி, திமுக செயல்பாடு குறித்த கேள்விக்கு, திமுகவின் செயல்பாடு தற்போது நன்றாக உள்ளது என்று பதில் அளித்துள்ளார். மேலும் நீதிமன்றத்தில் ஆஜரான மு.க.அழகிரியை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட திமுகவினர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.