தேர்தல் வரும் நிலையில் மீண்டும் பாஜகவில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர் யார்?

Jagadish Shettar
Jagadish Shettar
Published on

ர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்காததால் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தற்போது 2024 தேர்தல் வரும் நிலையில் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளது அம்மாநிலத்தில் கவனம்பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்று கர்நாடக மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக முன்னாள் முதல்வர் மற்றும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா, தலைவர் விஜயேந்திரா முன்னிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

ஜெகதீஷ் ஷெட்டர் யார்? 

67 வயதாகும் ஜெகதீஷ் ஷெட்டர், கடந்த 2012 - 13 ஆண்டுகளில் பத்து மாதங்கள் கர்நாடகாவின் முதல்வராக இருந்துள்ளார். கடந்த 1980-ம் ஆண்டு தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய ஜெகதீஷ், கர்நாடக பாஜகவில் மாநில தலைவர், கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். ஆறு முறை எம்எல்ஏவாக இருந்துள்ள இவர் லிங்காயத் சமூகத்தில் செல்வாக்கு மிக்கத் தலைவராக உள்ளார்.

கர்நாடக அரசில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார். அதேபோல், கடந்த 2008 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பாஜக முதல் முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைத்த போது, சட்டப்பேரவை சபாநாயகராகவும் இருந்துள்ளார்.

இவ்வாறு பாஜகவின் முகமாக இருந்த ஜெகதீஷ் ஷெட்டருக்கு கடந்த ஆண்டு ஏப்ரலில் அங்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு அவர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஹூப்ளி-தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. பாஜகவில் அவரிருந்த போது இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். என்றாலும் 2023 தேர்தலில் பாஜகவின் மகேஷ் தெங்கினாகையிடம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து நடந்த கர்நாடக சட்டமேலவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்சி ஆனார்.

மீண்டும் கட்சியில் இணைந்து குறித்து ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், "கடந்த காலங்களில் கட்சி எனக்கு பல பொறுப்புகளை கொடுத்துள்ளது. சில பிரச்சினைகள் காரணமாக நான் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தேன். கடந்த 8 - 9 மாதங்களில் பல்வேறு விவாதங்கள் நடந்தன, பாஜகவினர் மீண்டும் என்னைக் கட்சிக்கு வருமாறு அழைத்தனர். எடியூரப்பாவும், விஜயேந்திராவும் நான் மீண்டும் பாஜகவுக்கு திரும்ப வேண்டும் என்று விரும்பினர். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற நம்பிக்கையில் நான் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளேன்" என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com