கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்!

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்!

கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80. தொண்டை பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த உம்மன் சாண்டிக்கு பெங்களூருவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 4.25 மணிக்கு உம்மன் சாண்டியின் உயிர்பிரிந்ததாக அவரின் மகன் அறிவித்தார்.

கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புத்துப்பள்ளி என்ற இடத்தைச் சேர்ந்த உம்மன் சாண்டி கடந்த 1970ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து சாதனை படைத்தவர். 1971-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 12 முறை கேரள சட்டமன்றத்துக்கு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் உம்மன் சாண்டி. புதுப்பள்ளி சட்டசபை தொகுதியை அவர் தமது கோட்டையாக தக்க வைத்திருந்தார். கேரளா அரசில் உள்துறை, நிதித்துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்களின் அமைச்சராக பதவி வகித்தவர். கேரளா மாநில முதல்வராக 2 முறை பதவி வகித்தார். கேரளாவில் நீண்டகாலம் முதல்வராக இருந்தவர்களில் உம்மன் சாண்டிக்கு 4-வது இடம் உண்டு. கேரளா முதல்வராக மொத்தம் 2,459 நாட்கள் பதவி வகித்துள்ளார் உம்மன் சாண்டி.

2004 முதல் 2006 வரையிலும் 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரையும் கேரளாவின் முதலமைச்சராக இருமுறை பதவி வகித்துள்ளார். 2018ஆம் ஆண்டு காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்ட அவர், கடந்த 2019-ம் ஆண்டு முதலேஉடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார் உம்மன் சாண்டி. புற்றுநோய் பாதிப்புக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெர்மனியில் சிகிச்சை மேற்கொண்டார் உம்மன் சாண்டி. அதன்பிறகு,திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து நிலையில் உடல்நலன் மிகவும் பாதிப்படைந்தது. இதனையடுத்தே கர்நாடகா மாநிலம் பெங்களூரு மருத்துவமனைக்கு உம்மன் சாண்டி கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4.25 மணிக்கு உம்மன் சாண்டி, பெங்களூர் மருத்துவமனையிலேயே காலமானார். உம்மன் சாண்டியின் மறைவு கேரளா காங்கிரஸுக்கு மிகப் பெரும் இழப்பாகும். உம்மன் சாண்டியின் மறைவையொட்டி இன்று கேரளா மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.உம்மன் சாண்டியின் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனி இரங்கல் தெரிவித்தார்.மறைந்த உம்மன் சாண்டிக்கு ஒரு மகனும், இரு மகள்களும், மனைவியும் உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com