8-வது முறையாக தந்தையானார் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

8-வது முறையாக தந்தையானார் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

முன்னாள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீண்டும் தந்தையானார். இத்தகவலை அவரது மனைவி கேரி தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 5 ஆம் தேதி ஜான்சன் – கேரி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு இது மூன்றாவது குழந்தையாகும். ஆனால், முன்னாள் பிரதமருக்கு இது 8-வது குழந்தையாகும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? அது உண்மைதான்.

பிராங் ஆல்பிரட் ஒடிஸிஸ் ஜான்ஸன் என்னும் குழந்தை கடந்த 5 ஆம் தேதி பிறந்துள்ளது. அக்குழந்தையை வரவேற்கிறேன் என்று கேரி, தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குழந்தை தாயுடன் இருக்கும் படத்தையும் வெளியிட்டுள்ளார். என் குழந்தைக்கு கணவர் என்ன பெயர் வைத்துள்ளார் தெரியுமா? என்றும் அவர் கேட்டுள்ளார்.

எனது குழந்தையை நான் ஒவ்வொரு நிமிடமும் நேசிக்கிறேன். எனது மற்ற இரு குழந்தைகளும் புதிதாக பிறந்த சகோதரனை மகிழ்ச்சியுடன் பார்க்கின்றனர். நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சிக் கடலில் இருக்கிறோம் என்று கேரி தெரிவித்துள்ளார்.

முதல் மகன் வில்பிரட் கடந்த 2020 ஏப்ரல் மாதம் பிறந்துள்ளார். கோவிட் தொற்றுக்காக ஜான்சன் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிறகு இந்த குழந்தை பிறந்தது. அதன் பின் மகள் ரோமி கடந்த 2021 டிசம்பர் மாதம் பிறந்தாள். அப்போது ஜான்சன் பிரதமராக இருந்தார்.

கோவிட் பொது முடக்கம் சமயத்தில் பிரதமர் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது, நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பிஞ்சின் நடத்தை குறித்து புகார்கள் இருந்தும் அவரை துணை தலைமை கொறடாவாக நியமித்தது. நாடாளுமன்றத்தில் பொய்கூறியது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கிய போரிஸ் ஜான்சன் வேறு வழியில்லாமல் பிரதமர் பதவியிலிருந்து விலக நேரிட்டது. சர்ச்சைகளுக்கு இடையில் போரிஸ் ஜான்சன் பதவி விலகியிருந்தாலும் அவருக்கு எம்பிக்கள் மத்தியிலும் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் ஆதரவு உள்ளது.

ஜான்சன் இதுவரை மூன்று முறை திருமணம் செய்துள்ளார். வழக்குரைஞர் மரினா வீலர் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதன் மூலம் அவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கன்சர்வேடிவ் கட்சியின் ஊடக ஆலோசகராக இருந்த 35 வயது கேரியை திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் இப்போது மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. இது தவிர வேறு ஒரு பெண்ணுடன் இருந்த தொடர்பு மூலம் அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டர் மாதம் ரோமி பிறப்பதற்கு முன் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தமக்கு 6 குழந்தைகள் இருப்பதை போரிஸ் ஜான்சன் ஒப்புக்கொண்டிருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com