இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் எம்பி பதவியை ராஜினாமா செய்தார்!

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் எம்பி பதவியை ராஜினாமா செய்தார்!
Published on

மது நாட்டில் எங்கே என்ன தவறு நடந்தாலும் உடனே அது சம்பந்தமாக ஆட்சியில் உள்ள அரசியல் தலைவர்களை ராஜினாமா செய்யச் சொல்வது எதிர்க்கட்சிகளின் முதல் கோரிக்கையாக இருக்கும். ஆனால், இதுவரை எந்த அரசியல்வாதியும் அதுபோல் உடனே தங்களது பதவியை ராஜினாமா செய்ததாகத் தகவல் இல்லை. ஒருசிலர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், வேறு வழியின்றிதான் அதைச் செய்திருப்பார்கள். ஆனால், பத்து நாட்கள் நாடாளுமன்றத்தில் இருந்து விலகி இருக்கச் சொன்னதற்கே இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையே ராஜினாமா செய்திருக்கிறார்.

ஒரு நாட்டின் முன்னாள் பிரதமருக்கு, தனது எம்பி பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு என்ன நெருக்கடி என்றுதானே கேட்கத் தோன்றுகிறது. இங்கிலாந்தின் பிரதமராக போரிஸ் ஜான்சன் 2019ல் பதவி ஏற்றார். அந்த ஆண்டின் கடைசியில் சீன நாட்டில் ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்று உலகை ஒருகை பார்த்தது. மேலும், இது இங்கிலாந்து நாட்டிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்த நேரம், பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிறந்த நாளை விதிகளை மீறி தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார். அந்த விழாவில் அரசு அதிகாரிகள் மற்றும் பிரதமரின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டு பெரும் உற்சாகம் அடைந்தனர். இந்த விழாவில் இங்கிலாந்தின் தற்போதைய பிரதமரும் அப்போதைய நிதி அமைச்சருமான ரிஷி சுனக் உள்ளட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த விவகாரம் அப்போதே பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து போரிஸ் உடனே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் எதிர்க்கட்சிகள் சார்பில் எழுந்தது.

அதைத் தொடர்ந்து தனது செயலுக்கு நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்ததோடு, மன்னிப்பும் கோரினார் பிரதமர் போரிஸ் ஜான்சன். முன்னதாக, 2020ம் ஆண்டு ஜூன் மாதம் அவருக்கு போலீசார் அபராதம் விதித்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இங்கிலாந்தின் பிரதமராக உள்ள ஒருவரின் மீது சட்டத்தை மீறியதாக அபராதம் விதிக்கப்படும் முதல் நபர் ஆனார் இவர். மேலும், இது தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த குழுவின் அறிக்கை சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது. அதில் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, அதற்காக பத்து நாட்கள் அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய அந்தக் குழு பரிந்துரை செய்தது.

அதையடுத்து, ‘பத்து நாட்கள் என்ன… எனது எம்பி பதவியையே ராஜினாமா செய்கிறேன்’ எனக் கூறி அவர் போரிஸ் ஜான்சன் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இந்த ராஜினாமா குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘எனக்கு எதிரான நடவடிக்கைகளைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் இருந்து என்னை வெளியேற்றுவது உறுதியாகி விட்டது. ராஜினாமா எனக்கு வருத்தமளிப்பதாக இருந்தாலும், இது தற்காலிகம்தான். ஹாரியட் ஹர்மன் தலைமையிலான குழு ஜனநாயகத்துக்கு விரோதமாக என்னை வெளியேற்றுவதை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது. நாடாளுமன்றத்தை நான் தவறாக வழிநடத்தியதற்கான ஒரு சிறிய ஆதாரத்தையும் இந்தக் குழு வெளியிடவில்லை. எனினும், நான் உடனே பதவி விலகுகிறேன். இடைத்தேர்தலை சந்திக்கிறேன்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com