
ஐரோப்பாவின் சொர்க்கம் என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட தேசம், இன்று கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. காரணம்... அதன் மூத்த குடிமக்கள்! ஆம், தாராளமான சமூகச் சலுகைகளின் விளைவாக, பிரான்ஸ் ஒரு மாபெரும் சக்கரச் சுழலுக்குள் (Mad Circle) மாட்டிக்கொண்டுள்ளது.
சார்தக் அஹுஜா, ஐ.எஸ்.பி. கோல்ட் மெடலிஸ்ட் மற்றும் CA, முதலீட்டு வங்கி மற்றும் M&A துறைகளில் சிறந்தவர். அவர் ஸ்டார்ட்அப்களுக்கு ஃபண்ட்ரெய்ஸிங் ஆலோசனை அளித்து, 2 மில்லியன்+ பின்தொடர்பவர்களுக்கு நிதி கல்வி வழங்குகிறார். இவர் தன்னுடைய linkedin தளத்தில் பிரான்சின் தொடரும் அரச மாற்றங்களும், ஓய்வே இல்லாத போராட்டங்களும் பற்றி விவரித்து உள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளில், பிரான்ஸ் ஐந்து பிரதமர்களைக் கண்டுள்ளது என்றால், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம்.
நாட்டின் தெருக்களில் ஓய்வில்லாமல் நடக்கும் தொடர் போராட்டங்கள், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மீது மக்களுக்கு இருக்கும் ஆழமான வெறுப்பைக் காட்டுகின்றன.
கல்வி: கல்லூரி வரை இலவசக் கல்வி.
சுகாதாரம்: வரம்பற்ற இலவச சுகாதார சேவை.
வேலை இழந்தால்: அரசு தொடர்ந்து மாதாந்திர ஊதியம் வழங்கும்.
ஓய்வூதியம்: இறக்கும் நாள் வரை ஓய்வூதியம் உறுதி.
இவை அனைத்தும், நாடு இளமையாகவும், உழைக்கும் மக்கள் அதிகமாக இருந்தபோதும் உருவாக்கப்பட்ட விதிகள். ஆனால், காலப்போக்கில் மக்கள்தொகையின் விகிதம் தலைகீழாக மாறியது தான் இப்போதைய கொந்தளிப்புக்கான மூல காரணம்.
ஓய்வூதியத் தொகை : உழைக்கும் ஊதியம்: அதிர்ச்சியூட்டும் சமன்பாடு
பிரான்ஸின் பொருளாதாரம் இன்று ஒரு விபரீத சமன்பாட்டை எட்டியுள்ளது.
1990களில், 5 உழைக்கும் ஊழியர்களுக்கு 1 ஓய்வூதியம் பெறுபவர் இருந்தார்.
2010ல், 3 உழைக்கும் ஊழியர்களுக்கு 1 ஓய்வூதியம் பெறுபவர் ஆனார்.
இன்று, ஒவ்வொரு ஓய்வூதியதாரருக்கும் வெறும் 2 ஊழியர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
இதனால், உழைக்கும் மக்களுக்குச் சம்பளமாக வழங்கும் தொகையை விட, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கும் தொகை அதிகமாக மாறியுள்ளது!
நிலைமை இவ்வளவு மோசமாக இருந்தும், பிரெஞ்சு மக்கள் தங்கள் 35 மணி நேர வார வேலை , ஒயின் அருந்துதல் மற்றும் வாழ்க்கையை அனுபவிக்கும் கலாச்சாரத்தைக் கைவிடத் தயாராக இல்லை.
ஏனென்றால், பணம் தீர்ந்து போன வேகத்தில் கலாச்சாரம் மாறவில்லை.
அரசு சீர்திருத்தங்களுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு :
இந்தச் சுழலில் இருந்து பிரான்ஸ் அரசு வெளியே வர என்ன செய்ய முடியும்? அனைத்து வழிகளும் அடைபட்டுள்ளன.
ஓய்வூதிய வயதை உயர்த்த முயற்சி: அரசு ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 64 ஆக உயர்த்த முயன்றபோது, நாடு முழுவதும் கொந்தளித்தது.
"இரண்டு ஆண்டுகள் கூடுதலாக உழைக்க வேண்டுமா?" என்று கேட்டு மக்கள் வீதிக்கு வந்தனர்.
அண்டை நாடுகள் இதைவிட அதிக ஓய்வு வயதைக் கொண்டிருந்தபோதும், இந்தச் சீர்திருத்தத்தை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டனர்.
வரிகளை உயர்த்த: ஏற்கனவே வரிகள் அதிகமாக இருப்பதால், உயர்த்த இயலாது.
சமூகச் சலுகைகளைக் குறைக்க: இதைச் செய்தால் மக்கள் புரட்சியில் ஈடுபடத் தயாராக உள்ளனர்.
கடன்பெற: நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருவதால், உலக நாடுகள் கடன்கொடுக்கத் தயங்குகின்றன.
ஒவ்வொரு புதிய அரசாங்கமும் ஒரு சீர்திருத்தத்தைக் கொண்டுவர முயல, எதிர்க்கட்சிகள் அதை முழுவதுமாக எதிர்க்கின்றன.
இதன் பலன், தொடர்ச்சியான சீர்திருத்தத் தடைகள் மற்றும் அதிருப்தி அடைந்த மூத்த குடிமக்களின் தொடர் போராட்டங்கள் என பிரான்ஸ் ஒரு மூடப்பட்ட சக்கரத்திற்குள் சுழல்கிறது.
வளரும் தேசங்களின் காலம்!
ஒருவர் தங்கள் தொழில் வாழ்க்கையை உருவாக்க சரியான நாட்டைத் தேர்வு செய்யும்போது, இரண்டு முக்கிய பொருளாதாரக் காரணிகளைக் கவனிக்க வேண்டும்:
மக்கள்தொகை ஈவுத்தொகை (Demographic Dividend) மற்றும் உழைக்கும் விருப்பம் (Willingness to Work).
இன்று, உழைக்கும் வயதில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை (Demographic Dividend) இந்தியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்குச் சாதகமாக உள்ளது.
அதனால்தான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தொழில் தொடங்கச் சரியான காலம் என்பது 20 ஆண்டுகளுக்கு முந்தையது.
இன்னும் 20 ஆண்டுகளில், இந்த சாதகமான நிலை ஆப்பிரிக்கா கண்டத்திற்குச் செல்லக்கூடும்.
உழைக்கும் மக்கள் அதிகமாக இருக்கும் நாடுகளில் முதலீடு செய்வது, பொருளாதாரத்திற்கு மட்டுமல்லாமல், தனிநபரின் மன ஆரோக்கியத்திற்கும், வாழ்க்கைத் தரத்திற்கும் சிறந்தது என்பது பிரான்சின் இந்த நெருக்கடியில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமாகும்.