நடிகர் ஜெமினி கணேசனின் உறவினர் மீது மோசடி புகார்.

நடிகர் ஜெமினி கணேசனின் உறவினர் மீது மோசடி புகார்.
Published on

சென்னை போரூரில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரியில், மருத்துவ சீட் வாங்கித் தருவதாகக் கூறி ஐந்து லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், நடிகர் ஜெமினி கணேசனுடைய பேரனின் மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னை மேற்கு மாம்பலம் ஆற்காடு சாலையைச் சேர்ந்தவர் மஞ்சு. தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது தந்தையின் பாதுகாப்பில் ஆடை வடிவமைப்புத் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சின்னத்திரை நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்து கொடுத்து வருகிறார் மஞ்சு.  இவரிடம் வாடிக்கையாளராக அறிமுகமானவர், நடிகர் ஜெமினி கணேசனின் பேரனும், தமிழில் 'ராமானுஜன்', 'சென்னை 28 இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களிலும் மேலும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பிரபலமானவருமான நடிகர் அபிநய். 

நடிகர் அபிநயுடைய மனைவியான அபர்ணா, மஞ்சுவிடம் நன்றாகப் பேசி பழகி வந்துள்ளார். மஞ்சுவின் மகள் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்ததைக் கேள்விப்பட்ட அபர்னா, போரூரில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரியில் எளிதாக சீட் வாங்கிவிடலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். 

அந்தக் கல்லூரியில் தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருப்பதாகவும், 20 லட்சம் கொடுத்தால் மருத்துவக் கல்லூரியில் சீட்டு உறுதி என்றும் மஞ்சுவை அபர்ணா நம்ப வைத்துள்ளார். முதற்கட்டமாக, 5 லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்து புக் செய்து ரசீது பெற்றுக் கொள்ளலாம் என்று அபர்ணா கூறி இருக்கிறார். மீதி பணத்தை கல்லூரியில் சேர்ந்த பிறகு செலுத்தி கொள்ளலாம் என்று அபர்ணா கூறியதை நம்பி, மஞ்சு அவரிடம் 5 லட்சம் ரூபாயை கடந்த ஜனவரி மாதம் கொடுத்திருக்கிறார். 

பணத்தைப் பெற்றுக் கொண்ட ஐந்து நாட்கள் கழித்து, மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்து விட்டதாகக் கூறி Whatsapp வழியாக சான்றிதழ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அந்த சான்றிதழை எடுத்துக்கொண்டு மகளை மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்றபோது, இது போலியான சான்றிதழ் என மஞ்சுவுக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தான் கொடுத்த பணத்தை அபர்னாவிடம் திரும்பக் கேட்டுள்ளார். 

அப்போது அபர்ணா, அந்த ஐந்து லட்ச ரூபாயை கல்லூரியில் பணிபுரியும் எனது நண்பருக்குதான் அனுப்பி வைத்திருப்பதாகவும், அவரிடம் சென்று அதைப் பெற்றுக் கொள்ளுமாறும் பல்வேறு காரணங்களைக் கூறி இழுத்தடித்திருக்கிறார். இதனால், மஞ்சு மாம்பலம் காவல் நிலையத்தில் அபர்ணாவின் மீது புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் அபர்ணா மீதும், அவருடைய நண்பராகக் கூறப்படும் அஜய் ராஜகோபால் மீதும் போலீசார் வழக்கு பதிவு அவர்களைத் தேடி வருகிறார்கள். மேலும் இதே போல் அவர்கள் வேறு எங்கெல்லாம் மோசடி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது பற்றிய விசாரணையும் நடந்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com