கள்ள நோட்டு அடிப்பது எல்லாம் பழைய பித்தலாட்ட முறை, ஒரு பேங்கையே போலியாக திறப்பது தான் புது ஸ்டைல். மோசடி கும்பல் ஒன்று போலியாக பாரத ஸ்டேட் பாங்க் (SBI) கிளையை திறந்து வாடிக்கையாளர்களின் பணத்தினை சுருட்டியுள்ளது.
10 நாட்களுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 250 கிமீ தொலைவில் உள்ள சோபாரா என்ற சிறிய கிராமத்தில் தான் ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்று திறக்கப்பட்டது. அனைத்து சாதனங்களும் வங்கியின் தோற்றமும் SBI கிளையை போன்றே உருவாக்கப்பட்டது. வங்கிக்கு தேவையான அனைத்து சாதனங்களும் கணினிகள், பிரிண்டர்கள், சேர்கள் என அனைத்தையும் எஸ்பிஐ வங்கி மாதிரியே சந்தேகம் வராமல் அமைத்தனர். கவுன்டர்களும் எஸ்பிஐ வங்கி போல் தோற்றத்தில் இருந்தது.
கிராமத்திற்கு வங்கி வந்துள்ளதால் இனி நகரங்களுக்கு செல்ல வேண்டியதில்லை என மக்கள் இந்த போலி வங்கியில் ஏராளமாக பணத்தை டெபாசிட் செய்து வந்துள்ளனர். இது போலியான வங்கி என்று ஒருவர் கூட உணரவில்லை. இதை விடக் கொடுமையான விஷயம் என்ன என்றால் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்குக் கூட இது போலி வங்கி என்று தெரியாது. அவர்கள் தங்களை உண்மையான ஸ்டேட் வங்கி ஊழியர்கள் என்று நினைத்துக் கொண்டனர்.
வேலை தேடி வரும் இளைஞர்கள் மற்றும் பெண்களை குறிவைத்த மோசடி கும்பல், ஒவ்வொருவரிடமும் 2 முதல் 6 லட்சம் வரை பணம் வாங்கி கொண்டு அவர்களுக்கு போலியாக வேலைவாய்ப்பு வழங்கியுள்ளனர். இங்கு வேலைக்கு சேர்ந்த அனைவருக்கும் ஸ்டேட் பாங்க் பெயரில் போலியாக அச்சடிக்கப்பட்ட வேலை சேர்ப்பு கடிதம் கொடுக்கப்பட்டது. அதை உண்மை என்று நம்பி அவர்களும் வேலைக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் சோபாரா கிராமத்தைச் சேர்ந்த அஜய்குமார் அகர்வால் என்பவர் எஸ்பிஐ கியோஸ்க் வழங்கக் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்குள் கிராமத்தில் வங்கிக் கிளை திறக்கப்பட்டது குறித்து அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது பற்றி அவர் பக்கத்தில் உள்ள டப்ரா கிளை மேலாளரிடம் விசாரித்துள்ளார். அவர்களுக்கும் எந்த அறிவிப்பும் இன்றி புதிய கிளை திறக்கப்பட்டது அதிக சந்தேகத்தை கிளப்பியது.
இதுபற்றி பக்கத்து டப்ரா எஸ்பிஐ கிளை மேலாளர் புகார் அளித்ததையடுத்து, காவல்துறையினர் மோசடி பேங்கிற்கு சீல் வைத்தனர். தலைமறைவாக இருந்த ரேகா சாஹு, மந்திர் தாஸ், பங்கஜ் உள்ளிட்ட 4 பேர் பிடிபட்டனர். 2020 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் இதை போன்று போலி ஸ்டேட் பாங்க் கிளை திறந்து மோசடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.