புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்குச் சென்று படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக 1 ரூபாயில் சிறப்பு பேருந்து சேவை இயக்கப்பட்டு வந்தது. இதனிடையே கொரோனாவின் தாக்கம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த திட்டம் மீண்டும் கிராமப்புற மாணவர்களுக்கான 1 ரூபாய் சிறப்பு பேருந்து, 2 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இலவச பேருந்தாக மாற்றப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஏ.எப்.டி மைதானத்தில் இருந்து மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவையை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், ”புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 74 பேருந்துகள் மாணவர்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்படுகிறது. இதில் 17 பேருந்துகள் காரைக்காலில் இயக்கப்படுகிறது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா, ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு என தனித் தனியாக பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும் மாணவர்களுக்கு மதிய உணவுடன் வழங்கப்பட்டு வந்த முட்டை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மீண்டும் வழங்கப்படும். வாரத்தில் 2 முட்டைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 3 முட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது நிலுவையில் உள்ள இலவச சீருடை, இலவச மடிக்கணினி, சைக்கிள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று தெரிவித்தார்.