குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. குஜராத்தில் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. இந்நிலையில், மக்களை கவரும் விதமான அறிவிப்பை ஆளும் பா.ஜ.க , அரசு நேற்று அறிவித்தது.
குஜராத்தில் ஆண்டுக்கு இரண்டு வீட்டு உபயோக, 'காஸ்' சிலிண்டர்கள் இலவசமாக அளிக்கப்படும் என, பா.ஜ.க , அரசு அறிவித்துள்ளது. இதன் வாயிலாக, சி.என்.ஜி., யில் கிலோவுக்கு 6-7 ரூபாயும், பி.என்.ஜி., யில் கிலோவுக்கு 5 ரூபாயும் மக்களுக்கு மிச்சமாகும்.
பா.ஜ., வைச் சேர்ந்த மாநில கல்வி அமைச்சர் ஜிட்டு வாகானி இதனை அறிவித்துள்ளார் . மத்திய அரசின், 'உஜ்வாலா' திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்களுக்கு, வீட்டு பயன்பாட்டுக்கான இரண்டு காஸ் சிலிண்டர்கள், இனி ஆண்டுதோறும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதன் வாயிலாக, 38 லட்சம் இல்லத்தரசிகள் பயன் அடைவர். மக்களுக்கு ஆண்டுக்கு 1,700 ரூபாய் மிச்சமாகும். இந்த தொகை, பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த சலுகைக்காக 650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், சி.என்.ஜி., வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு மற்றும் பி.என்.ஜி., குழாய் வழி வழங்கப்படும் இயற்கை எரிவாயுக்கான 10 சதவீத மதிப்பு கூட்டு வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.