ஐந்து மாநிலத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியினர் மாணவர்களுக்கு இலவச இணைய வசதி வழங்குவதாக வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் விடுத்துள்ள கோரிக்கை...
2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு நாடு முழுவதும் தயாராகிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் தற்போது ஐந்து மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும் என்ற நோக்கில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்திருக்கிறது. மாநிலத்தில் எப்படியேனும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தேர்தல் வாக்குறுதியை பட்டியலிட்டு இருக்கிறது. அதில் தகுதியுடைய திருமணத் தம்பதிகளுக்கு 10 கிராம் தங்கம் அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தெலங்கானா மாநிலத்தில் திருமணத் தம்பதிகளுக்கு மகாலட்சுமி உறுதித் திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இதோடு சேர்த்து 10 கிராம் தங்கம் என்ற இந்தப் புதிய திட்டம் தெலங்கானாவில் முக்கிய பேசுபொருளாக மாறி இருக்கிறது. இது மட்டுமல்லாது, மாணவர்களுக்கு இலவச இணைய வசதி வழங்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதேநேரம் அனைவருக்கும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு இணைய வசதி வழங்க வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி குழு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் பாபு கூறுகையில், “காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை கவனமாக தேர்வு செய்து வருகிறது. அவை அனைத்தையும் தேர்தலில் வெற்றி பெற்ற உடனே செயல்படுத்த தீவிர முயற்சியை முன்னெடுப்போம். அனைவருக்கும் இலவச இணைய வசதி என்பதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த பின்னர் அது முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.