தமிழன் படத்தில் விஜய் இலவச சட்ட ஆலோசனை மையத்தை நடத்தி மக்களுக்கு பணியாற்றுவார். அதைப் பின்பற்றி தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தேர்தல் அரசியலை நோக்கி தனது முழு கவனத்தை திருப்பி உள்ளார் என்பதை அவருடைய அடுத்த அடுத்த அறிவிப்புகள் வெளிக்காட்டி வருகின்றன. இவ்வாறு தனது மக்கள் இயக்கத்தின் மூலமாக மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இரவு பாடசாலை போன்ற போன்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
மேலும் விஜய் மாணவர்களை இளைஞர்களை குறி வைத்து தனது அரசியல் நடவடிக்கையை தொடங்கி இருக்கிறார் என்று கூறப்பட்டது. இதே நேரம் விஜயின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளின் போது ஏற்படும் சிக்கல்களை சமாளிப்பதற்கும், நிர்வாகிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் விஜய் மக்கள் இயக்கத்தில் புதிதாக வழக்கறிஞர் அணியை ஏற்படுத்த உள்ளார் என்ற தகவல் கசிந்தது. இதை உறுதி செய்யும் வண்ணம் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டத்திற்கான அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டார்.
இதன் தொடர்ச்சியாக இன்று பனையூர் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியது, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்காணித்து அவற்றை மாவட்ட தலைவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல்களை பெற்று தொகுக்க வேண்டும். பொதுநல வழக்குகள் பதிவு செய்யும் வழக்கறிஞர்களின் தகவல்களையும், அவர்களது வழக்குகளின் நிலை குறித்தும் கண்காணிக்க வேண்டும்.
மேலும் தமிழ்நாட்டு மக்களின் உரிமையை காக்கும் வழக்குகளில் மனுதாரராக இணைந்து அந்த வழக்கின் மூலம் மக்கள் உரிமையை பாதுகாக்க வேண்டும். இயக்க நிர்வாகிகள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதியப்படும் வழக்குகளுக்கு சட்ட ஆலோசனை வழங்க குழுக்கள் அமைக்கப்படும். அவர்கள் மாவட்ட தலைவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேசியுள்ளார்.