எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போன்ற பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19(1)(ஏ) பிரிவின் கீழ் சாதாரண குடிமக்களுக்கு இருக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது. எனவே அவர்கள் மீது கூடுதலாக கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜன. 3) தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீர், ஏ,எஸ்.போபண்ணா, பி.ஆர்.கவாய், வி.ராமசுப்பிரமணியன் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு ஒரு வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
நாட்டில் உள்ள குடிமக்களுக்கான பேச்சு சுதந்திரம் அரசியலமைப்புச் சட்டம் 19 (2) பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுவாழ்வில் ஈடுபட்டுவர்களின் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்த எல்லைமீறி செல்ல முடியாது என்றும் அந்த அமர்வு குறிப்பிட்டுள்ளது.
ஒரு அரசு அல்லது அந்த அரசின் விவகாரங்கள் தொடர்பாக அமைச்சர் ஏதேனும் அறிக்கை வெளியிட்டால் அதை அரசுடன் தொடர்புபடுத்தி பார்க்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
பேச்சு சுதந்திரமும் அதை வெளிப்படுத்துவதும் ஒரு நபருக்குரிய அடிப்படை உரிமை என்றாலும் அந்த பேச்சு வெறுப்பைத் தூண்டும் வகையில் இருக்கக்கூடாது என்று நீதிபதி பி.வி.நாகரத்னா தனிப்பட்ட தீர்ப்பில் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் அமைச்சரான ஆஸாம்கான், கூட்டு பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஒரு கருத்து வெளியிட்டிருந்தார்.
கடந்த 2016 ஆண்டு ஜூலையில், புலந்த்ஷாஹர் அருகே நெடுஞ்சாலையில் தனது மனைவியும், மகளும் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக அவளது கணவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை தில்லிக்கு மாற்றக்கோரி அவர் கேட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.
நெடுஞ்சாலையில் கூட்டு பலாத்காரம் நடந்ததாக கூறுவது அரசியல் சதியாகும் என்று ஆஸாம்கான் சர்ச்சைகுரிய வகையில் கருத்து வெளியிட்டிருந்தார். இது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கேட்டிருந்தார்.
இது தொடர்பான விசாரணையின்போது பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் பேசும்போது சுயகட்டுப்பாடுடன் பேசவேண்டும். அவர்கள் வெளியிடும் கருத்துகள் யாரையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகும். அரசியல்வாதிகளானாலும் சரி, குடிமக்களாக இருந்தாலும் சரி இதை கடைப்பிடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்தது. நீதிபதி நாகரத்னா கூறுகையில், “பொது வாழ்க்கையில் ஈடுபட்டுவர்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் காளீஸ்வரம் ராஜ், எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் பேசுவதற்கும், கருத்துகளை வெளியிடுவதற்கும் நடத்தை விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியும், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜராகி இருந்தனர்.