சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக வெளியான செய்தியில் கொஞ்சமும் உண்மையில்லை. சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்கள் தவறானவை . உதயநிதி அறக்கட்டளைக்கென்று எவ்விதமான அசையா சொத்துக்களும் கிடையாது சொத்துக்கள் முடக்கத்திற்கும் அறக்கட்டளைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. திரைப்படத் தயாரிப்பு, ஓட்டல் மற்றும் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வரும் லைகா நிறுவனம் மற்றும் பல்வேறு குழும நிறுவனங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் சோதனையின் போது பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. மொத்தமாக ரூ. 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன. இத்துடன் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் இருந்த ரூ. 34.7 லட்சம் தொகையும் முடக்கப்பட்டது என்று அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வந்தது.
இந்த விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கட்டளை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்த அறிக்கையில் இருப்பதாவது.., "உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.36.3 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கென்று எவ்விதமான அசையா சொத்துக்களும் கிடையாது." "அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ள ரூ. 36.3 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கத்திற்கும், அறக்கட்டளைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அமலாக்கத்துறை முடக்கிய ரூ. 34.7 லட்சத்திற்கான தகுந்த ஆவணங்களை கொடுத்து, அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.