மும்பை அருகே கசாரா என்னும் இடத்திலிருந்து மத்திய ரயில்வே துறைக்கு சொந்தமான சரக்கு ரயில் ஒன்று 90 கன்டெய்னர்களுடன் சமீபத்தில் காணாமல் போய்விட்டதாகவும், பத்து நாட்களைக் கடந்த பிறகும் அது ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை வந்தடையவில்லை என்றும் தகவல் பரவி, சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சரக்கு ரயில் காணாமல் போன விவகாரம் தொடர்பாக மத்திய ரயில்வே துறை தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதில், “சரக்கு ரயில் 90 கன்டெய்னர்களுடன் காணாமல் போனதாக வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை. சரக்கு ரயிலைத் திட்டமிட்டபடி, ‘கன்டெய்னர் கார்பரேஷன் ஆஃப் இந்தியா’ ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு கொண்டு சென்று விட்டது. சம்பந்தப்பட்ட இந்த சரக்கு ரயில் பிப்ரவரி 1ம் தேதி புறப்பட்டு, 5ம் தேதி புஷாவல் மண்டலத்திலுள்ள செகாவ் என்ற ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. அங்கிருந்து அந்த ரயில் ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது. ஊடகங்களில் இது தொடர்பாக வெளியான செய்திகள் தவறானது. செய்திகளைச் சரியாக விசாரித்து அவற்றை வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறோம். அதோடு, இந்த தவறான செய்தி எப்படி வெளியானது என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி மிக்கேல் கூறியபோது, “90 கன்டெய்னர்களுடன் சரக்கு ரயில் நாக்பூரிலிருந்து புறப்பட்டு மிகவும் குறைவான வேகத்தில் வந்துகொண்டிருந்தது. ரயில் சிக்னலுக்காக அடிக்கடி ரயில் நிலையங்களில் நிறுத்திவைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டபோது யாரோ ரயில் காணாமல் போய்விட்டதாக தவறான தகவலைக் கொடுத்திருக்கின்றனர். 90 கன்டெய்னர்களுடன் ஒரு ரயில் எப்படி காணாமல் போகும்?" என்று கூறியுள்ளார்.
மேலும், ‘கன்டெய்னர் கார்பரேஷன் ஆஃப் இந்தியாவும் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ``90 கன்டெய்னர்களுடன் புறப்பட்ட ரயில் மும்பை துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. இந்த ரயில் காணாமல் போனதாக எங்கள் தரப்பிலிருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை" எனக் கூறி இருக்கிறது.