இனி பக்தர்கள் திருக்கோவில் பிரசாதங்களை வீட்டிலிருந்த படியே தபாலில் பெற்று பலனடையலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இன்று முதல் பக்தர்களின் விருப்பப்படி 48 முதுநிலை கோவில்களின் பிரசாதங்களை அவர்களின் இல்லங்களுக்கே அஞ்சல் துறையின் மூலம் அனுப்பி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதற்காக இந்தியா முழுவதும் உள்ளவர்கள் கோவில் பிரசாதங்களை பெறுவதற்கு பிரசாதத்திற்குரிய கட்டணம் மற்றும் அஞ்சல் தொகை மட்டுமே வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது .
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களின் தகவல்கள், சேவைகளை பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் 'திருக்கோவில்' என்ற பெயரில் நவீன வடிவில் செல்போன் செயலி உருவாக்கப்பட்டது. அதில் திருக்கோவில்கள் சம்பத்தப்பட்ட தகவல்களை பக்த்தல்கள் எளிதாக பெறலாம்.
48 முதுநிலை கோவில்களின் பிரசாதங்கள் பக்தர்களின் வீடுகளுக்கு தபால் துறை மூலம் அனுப்பி வைக்கும் திட்டமும் தயாரிக்கப்பட்டது. இன்று இந்த 2 திட்டங்களையும் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில், அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார் . 'திருக்கோவில்' செயலியின் மூலம் கோவில்களின் தலபுராணம், தலவரலாறு, நடை திறந்திருக்கும் நேரம், பூஜைகள், பிரார்த்தனைகள், அதற்கான கட்டண விவரங்கள், முக்கிய திருவிழாக்கள், அனைத்து கோணங்களிலும் கோவில்களை கண்டுகளிக்கும் மெய்நிகர் காணொலி, திருவிழாக்களின் நேரலை, கோவில்களை சென்றடைவதற்கான கூகுள் வழிகாட்டி, பக்தர்களுக்கான சேவைகள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். அன்னதானம், திருப்பணி போன்ற நன்கொடைகளையும் இந்த செயலி மூலம் வழங்கலாம்.