

இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பதற்கான முக்கிய காரணங்களில் வயிற்றுப்போக்கு (Diarrhoea) முன்னணியில் உள்ளது. ஒவ்வொரு வருடமும், சுமார் 13% குழந்தைகள் இந்த நீர்ச்சத்து இழப்பால் தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர்.
இந்த இக்கட்டான நேரத்தில், உயிர் காக்கும் மருந்தாக உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட ஒரே தீர்வு ORS (Oral Rehydration Solution) மட்டும்தான்.
ஆனால், கடந்த எட்டு வருடங்களாகச் சந்தையில் விற்றுவந்த பல சர்க்கரை நிறைந்த பானங்கள், தங்களைத் 'ORS' அல்லது அதன் 'மாற்று' என்று பொய்யான லேபிளுடன் விற்று வந்தன.
இதற்கு எதிராக ஹைதராபாத்தைச் சேர்ந்த குழந்தை நல மருத்துவர் டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ் நடத்திய நீண்ட போராட்டத்தின் விளைவாக, சமீபத்தில் FSSAI (இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ORS எப்படி உயிரைக் காக்கிறது?
வயிற்றுப்போக்கின்போது, உடலிலிருந்து உப்பும் (சோடியம்) சர்க்கரையும் (குளுக்கோஸ்) அதிக அளவில் வெளியேறிவிடுகின்றன.
இந்தச் சூழலில், குளுக்கோஸ் இருந்தால் மட்டுமே, உடலால் சோடியத்தை உறிஞ்சி நீரைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். இவை இரண்டும் இழக்கப்படும்போது, அது சிறுநீரக செயலிழப்பு (Kidney Failure) அல்லது மூளை வீக்கம் (Brain Swelling) போன்ற உயிருக்கு ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
சரியான அளவு மற்றும் விகிதத்தில் கலக்கப்பட்ட ORS மட்டுமே இழந்த சத்துக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுக்கிறது.
மாறாக, அதிக சர்க்கரை கலந்த அல்லது நீர்த்த பானங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கி, நீர்ச்சத்து இழப்பை அதிகரிக்கும்.
ஆபத்தான இரட்டை முனைகள்
ORS-ல் உப்பும் சர்க்கரையும் ஒரு சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். இதில் சிறு மாற்றம் வந்தாலும் ஆபத்துதான்.
அதிக சர்க்கரை : போலி பானங்களில் WHO பரிந்துரைத்த அளவைவிட (13.5 கிராம்/லிட்டர்) 10 மடங்குக்கும் அதிகமாக (110-120 கிராம்/லிட்டர்) சர்க்கரை இருக்கிறது.
அதிகப்படியான சர்க்கரை, நீர்ச்சத்தை உறிஞ்சவிடாமல் தடுத்து, வயிற்றுப்போக்கை மேலும் தீவிரமாக்கும்.
அதிக உப்பு : அளவுக்கு அதிகமாக உப்பு கலந்த கரைசலை குழந்தைகளுக்குக் கொடுத்தால், அது மூளையில் ரத்தக் கசிவு மற்றும் வலிப்பு போன்ற அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
மிரட்டல்களையும் தாண்டி கிடைத்த வெற்றி
டாக்டர் சந்தோஷ், தன் எட்டு வருடப் போராட்டத்தில், உற்பத்தியாளர்களின் மறைமுக மிரட்டல்களையும், சமூக வலைத்தளங்களில் வந்த அநாமதேய அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டார்.
இருப்பினும், அவர் குழந்தைகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மருத்துவ ஆவணங்கள் மற்றும் நோயாளிகளின் சாட்சியங்களைத் திரட்டி FSSAI உள்ளிட்ட அனைத்து சுகாதார அமைப்புகளுக்கும் முறையிட்டார்.
இதன் விளைவாக, FSSAI ஒரு தெளிவான உத்தரவைப் பிறப்பித்தது: இனி எந்த ஒரு உணவு மற்றும் பானத் தயாரிப்பு நிறுவனமும் 'ORS' என்ற வார்த்தையைத் தங்கள் பொருட்களின் பெயர், லேபிள் அல்லது வர்த்தக முத்திரையில் பயன்படுத்தக் கூடாது.
மருத்துவர்களின் அவசர வேண்டுகோள்
FSSAI உத்தரவு வந்தாலும், தயாரிப்பு நிறுவனங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகி, சுமார் ₹180 கோடி மதிப்புள்ள தங்கள் பழைய ஸ்டாக்கை விற்கத் தற்காலிக அனுமதி பெற்றுள்ளனர்.
எனினும், புதிய தயாரிப்புகளில் 'ORS' லேபிளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் இறுதியான மற்றும் கட்டாயமான அறிவுரை:
WHO அங்கீகரித்த ORS பாக்கெட்டை மட்டுமே பயன்படுத்தவும்.
பாகெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் சரியான அளவு நீரில் மட்டுமே அதைக் கரைக்க வேண்டும்.
எந்த ஒரு எனர்ஜி ட்ரிங்க், ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க் அல்லது சுவையூட்டப்பட்ட பானமும் உண்மையான ORS-க்கு ஒருபோதும் மாற்று ஆகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சரியான நேரத்தில், சரியாகக் கலக்கப்பட்ட ORS மட்டுமே குழந்தைகளைக் காக்கும் உயிர் காக்கும் கவசமாகும்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் UNICEF ஆகிய இரண்டும் இப்போது பயன்படுத்துவதற்குப் பரிந்துரைக்கும் 'குறைந்த ஆஸ்மோலாரிட்டி ORS' (Low-Osmolarity ORS)-ன் சரியான கலவை விவரங்கள்:
ஒரு லிட்டர் சுத்தமான குடிநீரில் கலக்க வேண்டிய உட்பொருட்களின் அளவுகள்:
நீரற்ற குளுக்கோஸ்: 13.5g
சோடியம் குளோரைடு: 2.6g
டிரைசோடியம் சிட்ரேட்: 2.9g
பொட்டாசியம் குளோரைடு: 1.5g