

மனிதர்கள் உயிர் வாழ முக்கியத் தேவைகளுள் ஒன்று தண்ணீர். அந்தத் தண்ணீர் மூலம் பலவித தொற்றுகளும் பரவுவதால் நமக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் உருவாகிறது. ஆரம்ப காலத்தில் கிணற்று நீர் ஆற்று நீர் என்று இருந்த நிலை மாறி தற்போது வீடுகளில் மினரல் வாட்டரும் , விழாக்களில் பாட்டில் நீரும் என நீரின் தேவை ஆகிவிட்டது. குடிநீர் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு பெருகி விட்ட நிலையில் அதன் மீதான கட்டுப்பாடுகளும் அவ்வப்போது எச்சரிக்கை படுத்தப்படுகிறது.
அந்த வகையில் தற்போது இந்தியாவில் பாட்டில் குடிநீர் மற்றும் மினரல் வாட்டர் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான விதிமுறைகளில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
பாட்டில் குடிநீர் விற்பனை செய்ய BIS மற்றும் FSSAI ஆகிய இரண்டு நிறுவனங்களிடமும் அனுமதி பெறுவது கட்டாயமாக இருந்து வந்த நிலையில் இதன் மூலம் ஏற்படும் நிர்வாக சிக்கல்களைத் தவிர்க்கும் விதத்தில் இனி FSSAI உரிமம் மட்டுமே போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக BIS முத்திரை பெறுவதற்கான கட்டாயம் நீக்கப்படுவது உற்பத்தியாளர்களுக்கு பெரிய நிம்மதியை அளித்துள்ளது என்கின்றனர்.உரிமம் பெறுவது எளிதாக்கப்பட்டாலும், தர கட்டுப்பாட்டில் எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை என்கிற அறிவிப்பு குறிப்பிடத்தக்கது. இந்த புதிய நடைமுறைகள் 2026, ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன.
உயிர் காக்கும் "குடிநீரை 'அதிக ஆபத்துள்ள உணவுப் பொருள்' (High-Risk Category) என்ற பிரிவில் FSSAI சேர்த்துள்ளதால் இனி குடிநீர் ஆலைகளில் கூடுதல் கண்காணிப்பும், கடுமையான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக அதிகம் புழக்கத்தில் உள்ள (Plastic Water Bottle) குடிநீர் பாட்டில்கள் BIS (IS 14543) தரச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இல்லாத நிலையில் தரமற்ற / போலி water bottles மீது நடவடிக்கை எடுக்கலாம். இது ஏற்கனவே உள்ள விதி எனினும் இனி வரும் காலத்தில் enforcement அதிகரிக்கலாம் எனப்படுகிறது.
மேலும் குடிநீரில் நச்சுயிரிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த பிரதி மாதம் கட்டாயம் ஆய்வகச் சோதனை செய்ய வேண்டும். தண்ணீரில் கதிர்வீச்சுத் துகள்கள் (Radioactive residues) கண்டறியப்பட்டால், அந்த நீர் ஆதாரத்தைப் பயன்படுத்துவது உடனடியாகத் தடை செய்யப்படும்.
மேலும், விற்பனைக்குச் சென்ற பாட்டில்களைத் திரும்பப் பெற உத்தரவிடப்படும்.
நிலத்தடி நீர் அல்லது பயன்படுத்தப்படும் மூல நீரை (Raw water) அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதிக்க வேண்டும்.
குடிநீர் ஆலைகள் ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கைக்கு (Auditing) உட்படுத்தப்படுவதுடன், திடீர் சோதனைகளும் நடத்தப்படும் என்று உற்பத்தியாளர்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்ட நிலையில் குடிநீர் தொடர்பான இது போன்ற செய்திகள் மக்களிடம் மேலும் விழிப்புணர்வுக்கு வழிவகுக்கிறது எனலாம்.