மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 2 வாரங்களில் 4வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான மோதலுக்கு முன்னதாக ஒரு பேரல் 70-72 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, பதற்றத்தின் உச்சத்தில் 120 டாலரை கடந்தது. கடந்த வாரம் 104-110 டாலர் என்ற அளவிலும், தற்போது 113-115 வரையும் அதிகரித்துள்ளது. கடந்த 15-ம்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14-ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.11ம் உயர்த்தப்பட்ட நிலையில் கடந்த 19-ம்தேதி 2-வது முறையாக பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் லிட்டருக்கு 91 காசுகளும் உயர்ந்தன.
3-வது முறையாக 23-ம்தேதி பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகள் உயர்ந்து ரூ.105.31க்கும், டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் உயர்ந்து ரூ.96.98க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 4-வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று (மே 25) பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.46 உயர்ந்து ரூ.107.77க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.99.55க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது நிலவிவரும் உலகளாவிய கச்சா எண்ணெய் தட்டுப்பாடு இப்படியே தொடர்ந்தால், இனிவரும் காலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மேலும் ஒரு விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிடும் என்று பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) இயக்குநர் எச்.ஆர். ராஜ் குமார் துபே நேற்று அறிவித்திருந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.